திருச்சி கிழக்கு தொகுதியில் நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் இருந்த 10 முக்கிய கோரிக்கைகளுக்கு முன்னுரிமை தந்து பட்டியலிட்டு இன்று திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப் குமாரிடம் அந்தத் தொகுதி திமுக எம்எல்ஏ இனிகோ எஸ். இருதயராஜ் அளித்தார்.
தங்கள் தொகுதியில் நீண்ட நாட்களாக தீர்க்கப்படாமல் உள்ள 10 கோரிக்கைகளை முன்னுரிமைப்படுத்தி பட்டியல் அனுப்ப வேண்டும் என்றும், அடுத்த 15 நாட்களுக்குள் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை பட்டியலை அனுப்பி வைக்க வேண்டும் என்றும், அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தார்.
இந்நிலையில், திருச்சி கிழக்கு தொகுதி திமுக எம்எல்ஏ இனிகோ எஸ். இருதயராஜ் இன்று திருச்சி மாவட்ட ஆட்சியரை சந்தித்து 10 முக்கி கோரிக்கைகளுக்கு முன்னுரிமை தந்து பட்டியலை ஒப்படைத்தார்.
இதுகுறித்து பின்னர் அவர் கூறியதாவது:
மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையாரை தரிசிக்க வரும் வயதானவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் சிரமமின்றி தரிசிக்க ரோப் கார் வசதி, 24 மணி நேரமும் தங்கு தடையற்ற குடிநீர், போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு கண்டு மக்கள் நடந்து செல்ல நடை பாதை, சிரமமான பகுதிகளில் சுரங்கப் பாதை, கே. சாத்தனூர் ரயில்வே கிராசிங்கில் மேம்பாலம், உய்யக்கொண்டான் கால்வாய் சீரமைப்பு, டவுன்ஹால் சீரமைப்பு, வீட்டு மனை பட்டா போன்ற கோரிக்கைகளை பட்டியலிட்டு மிக விரைவாக திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் இன்று சமர்ப்பித்தேன்.
எனது தொகுதியின் முன்னேற்றத்திற்கான முக்கிய தேவைகளை தெரிவிக்க வாய்ப்பளித்த தமிழக முதல்வர் அண்ணன் தளபதி அவர்களுக்கு தொகுதி மக்களின் சார்பாக இதயம் நிறைந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் இருதயராஜ்.
இந்நிகழ்ச்சியில் மாநகர 3 வது மண்டல குழு தலைவர் திரு.மு.மதிவாணன் உடனிருந்தார்.
source https://news7tamil.live/unresolved-problems-in-the-constituency-the-first-mla-to-give-a-list-to-the-district-collector.html