23 08 2022
கேரள மாநிலம் விழிஞ்சம் துறைமுக திட்டத்துக்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு அளித்துள்ளனர். இந்நிலையில், அங்கு நடக்கும் மீனவ மக்களின் போராட்டங்களுக்கு கத்தோலிக்க திருச்சபை ஆதரவு உள்ளது.
இதற்கு மத்தியில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை காண கேரள மாநில காங்கிரஸ் தலைவர் வி.டி. சதீசன் அங்கு சென்றார். அப்போது மக்கள் அவரிடம் கோபமான கேள்விகளை முன்னிறுத்தினர்.
அரசியல்வாதிகள் மீது அவர்கள் கோபத்தில் இருப்பது இதன் மூலம் அறிய முடிந்தது. கேரளாவில் இந்தத் திட்டம் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தால் 2015ஆம் ஆண்டு அதானி குழுமத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தாகி கொண்டுவரப்பட்டது.
அப்போது 1000 நாள்களுக்குள் அதாவது 2019ஆம் ஆண்டுக்குள் துறைமுகத்தை கட்டி முடிக்க வேண்டும் என ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் தற்போதுவரை பணிகள் முடியவில்லை. முன்னதாக இந்தத் திட்டத்தின் ஒப்பந்தம் மற்றும் விதிகள் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமயிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி கூட்டணி கட்சியினர் விமர்சித்தனர்.
தொடர்ந்து மார்க்சிஸ்ட் தலைமயிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி கூட்டணியினர் ஆட்சியை கைப்பற்றினர். அப்போது, மக்கள் நலத் திட்டம் மற்றும் வளர்ச்சியில் தீவிர கவனம் செலுத்தப்பட்டது.
எனினும் மீனவ மக்கள் தொடர்பான கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. கடலோர மக்களின் பல்வேறு கோரிக்கைகள் நிலுவையில் உள்ளன. எனினும் இந்த விவகாரத்தில் காங்கிரஸூம் அடக்கியே வாசிக்கிறது.
ஏனெனில் விழிஞ்சம் துறைமுக திட்டத்தில் கையெழுதிட்டது காங்கிரஸ்தான். தற்போது நடைபெறும் போராட்டத்துக்கு பேராயர் யூஜின் ஹெச் பெரைரா தலைமை வகிக்கிறார். இது குறித்து அவர் பேசுகையில், “தொடர்ச்சியாக அனைத்து அரசாங்கங்களும் கடலோர மக்களுக்கு துரோகம் செய்கின்றன” என்றார்.
தொடர்ந்து, நலத்திட்டம் என்ற பெயரில் இம்மக்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழக்கின்றனர். இஸ்ரோ, விமான நிலையம் எனப் பல திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. அதற்கு கடலோர மக்கள் விலை கொடுக்கின்றனர்” என்றார்.
லத்தீன் கத்தோலிக்க திருச்சபை பாரம்பரியமாக இப்பகுதியில் உள்ள மீனவர்களின் சமூக-பொருளாதார வாழ்க்கையில் ஒரு பெரிய பங்கைக் கொண்டுள்ளது, அவர்கள் பெரும்பாலும் இந்த கத்தோலிக்க பிரிவைச் சேர்ந்தவர்கள்.
தேர்தலில், சமூகம் பெருமளவில் காங்கிரஸுடன் தங்கியிருந்தாலும், விதிவிலக்குகள் உள்ளன.
விழிஞ்சம் மீனவர்கள் 2019 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸின் சசி தரூரை ஆதரித்த நிலையில், 2021 சட்டமன்றத் தேர்தலில் இடதுசாரி ஜனநாயக முன்னணி வேட்பாளர் ஆண்டனி ராஜுவை ஆதரித்தனர்.
இடதுசாரி கூட்டணி ஆட்சியில் ஒரு லத்தீன் கத்தோலிக்கர் தற்போது அமைச்சராக இருக்கிறார். கடற்கரையோர மக்கள் மீது திருச்சபையின் ஆதிக்கத்தைப் பற்றிக் குறிப்பிடுகையில், அரசியல் நோக்கரும், கேரள மத்தியப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தருமான டாக்டர் ஜி கோபகுமார், “இங்குள்ள மீனவர்களின் வாழ்வில் தேவாலயம் எப்போதும் முக்கியப் பங்கு வகிக்கிறது.
மூன்று தசாப்தங்களுக்கு (30 ஆண்டுகள்) முன்னர், நான் விழிஞ்சம் கடற்கரைக்கு வந்தபோது, கடலுக்குச் செல்லும் மீனவர்களுக்கான எச்சரிக்கை பலகையை நான் கவனித்தேன். இது அரசாங்கத்தால் அல்ல, உள்ளூர் பிஷப்பால் போடப்பட்டது.
நமது அரசியல் அமைப்பு மீனவ சமூகத்துடன் ஒரு நல்லுறவை ஏற்படுத்தவோ அல்லது அவர்களுடன் நேரடி உரையாடலை உருவாக்கவோ முடியாததால் திருச்சபைக்கு இதில் இன்னும் பெரிய பங்கு உள்ளது.
மீனவர்களை ஒருங்கிணைக்கும் பணியை சர்ச்சில் விடாமல் அரசியல் கட்சிகள் எடுத்திருக்க வேண்டும்,” என்றார்.
ஆக, இந்தப் போராட்டம் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
source https://tamil.indianexpress.com/india/as-parties-hedge-church-backs-fishermens-protest-against-adani-port-project-498438/