திருச்சி பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைய உள்ள இடம் பேருந்து நிலையத்திற்கு தகுதியற்ற இடம் என அதிமுக முன்னாள் எம்பி ப.குமார் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கொடுத்துள்ள புகார் மனுவில், “திருச்சியில் சுமார் ரூ.350 கோடியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்படும் எனஅரசாணை வெளியிடப்பட்டு அதன் பிறகு கடந்த டிசம்பர் 31ஆம் தேதி முதலமைச்சரால் அடிக்கல் நாட்டப்பட்டது.
ஒருங்கிணைந்த பேருந்து முனையம் ரூ.150 கோடியிலும் கனரக சரக்கு வாகனம் முனையும் ரூ.65.90 கோடியிலும் பல்வகை பயன்பாடு மற்றும் வசதிகளுக்கான மையம் ரூ.84.78 கோடியும் சாலைகள் மழை நீர் வடிகால் மற்றும் இதர உட்கட்டமைப்பு வசதி ரூ.40.30 கோடியும்பணிகள் நடைபெற உள்ளன.
இதற்கான, விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு அரசின் உட்கட்டமைப்பு நிதியின் கீழ் 140 கோடியும், மாநகராட்சியின் பொது நிதியிலிருந்து 50 கோடியும், தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டு கழகம் மூலம் கடன் ரூ.187 கோடியும் என சுமார் ரூ.350 கோடிக்கு பணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக, கடந்த 25.5.2022ஆம் தேதி கிராவல் மண் நிரப்புவதற்கான டெண்டர் விடப்பட்டது.
ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைப்பதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள பஞ்சப்பூர் இடமானது ஏற்கனவே திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் கழிவுநீர் சேகரிப்பு செய்யும் இடமாக இருந்து வந்தது.
அந்த இடம் மண் பரிசோதனை செய்யப்பட்டதில் பேருந்து நிலையம் அமைக்க உகந்தது அல்ல என்று மண் பரிசோதனை முடிவுகள் வந்துள்ளதே என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என் நேரு அது தெரிந்துதான் நாங்கள் பேருந்து நிலையம் அமைக்கின்றோம் என்று பொறுப்பில்லாத பதில் கூறியுள்ளார்.
மேற்குறிப்பிட்ட நடைமுறையால் மோசமான பின் விளைவுகளை புதிதாக அமைய இருக்கின்ற முனையங்கள் எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என்பதை மனதில் கொண்டு மேற்கொண்ட பணிகளை தொழில்நுட்ப பார்வையோடு செயல்படுத்த ஆவண செய்ய வேண்டும்.
அத்துடன், பாதுகாப்புடனும், ஸ்திரத்தன்மையுடனும் மேற்கண்ட முனையங்கள் அமைவதை உறுதிப்படுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், திருச்சி ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைய உள்ள இடத்தில் மண்ணை திருச்சி தேசிய தொழில்நுட்ப கழக நிபுணர் குழு ஆய்வு செய்து பின்னர் அவ்விடத்தில் கட்டுமான பணிகள் தொடரலாம் என்று உறுதி செய்யப்பட்ட பின்னரே பணிகள் தொடரப்பட்டு வருகிறது என அமைச்சர் கே.என் நேரு தெரிவித்துள்ளார்.
க. சண்முகவடிவேல்
source https://tamil.indianexpress.com/tamilnadu/former-aiadmk-mp-kumar-says-trichy-panjapur-area-is-not-the-right-place-to-build-an-integrated-bus-stand-500966/