வியாழன், 25 ஆகஸ்ட், 2022

மாண்புமிகு பிரதமர் இதை பேசியிருந்தால் ..

 

மாண்புமிகு பிரதமர் இதை பேசியிருந்தால் ..
P Chidambaram writes

சகோதர சகோதரிகளே ,

 75 ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியா சுதந்திரம் பெற்றது. நாடே விழித்தெழுந்தது.  நமது முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் வார்த்தைகளில் சொல்வதானால் விதியுடன் நாம் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டு நமது பயணத்தை தொடங்கினோம். தொடர்ந்து வந்த அரசுகள்  நமது அரசியலமைப்பைப் பாதுகாக்க  தங்களால் இயன்றதைச் செய்துள்ளன.  நமது இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை பாதுகாக்கவும்,  நமது பொருளாதாரத்தின் வளர்ச்சியைத் தூண்டவும்   நமது மக்களுக்கு சுகாதாரம், கல்வி, வேலைகள் மற்றும் உதவிகளை வழங்க வேண்டும். உண்மையில் எப்போதெல்லாம் தடுமாறி விழுந்தோமோ அப்போதெல்லாம் சுதாரித்து  பயணத்தை தொடர்ந்து வந்துள்ளோம். 

ஜனநாயகம் நமது தவறுகளை சரிசெய்ததால் நம்மால் நமது  தோல்விகளை சமாளிக்க முடிந்தது. அதனால்தான், ஒவ்வொரு ஆண்டும் இந்த நாளில், ஜனநாயகப் பாதையில் உறுதியாக இருப்பதற்கான உறுதிமொழியை நாங்கள் புதுப்பித்துக் கொள்கிறோம். 

உண்மையை இப்போது சொல்லவும்

செங்கோட்டையின் அரண்மனையில்   இருந்து நான் எட்டு முறை உங்களிடம் பேசியிருக்கிறேன். நான் பிரதமராகவும் ஒரு கட்சியின் தலைவராகவும் பேசினேன். இன்று, நான் ஒரு வித்தியாசமாக   பேச விரும்புகிறேன்.  அரசாங்கத் தலைவர் என்ற முறையில் நான் உங்களிடம் பேசும்போது, உங்கள் துயரங்கள், கவலைகள், நம்பிக்கைகளை  புரிந்து கொண்டு  சக மனிதனாக  பேச விரும்புகிறேன். சில அம்சங்களில் மிகவும் வேதனையுடன்  உண்மையை நான் பேசும்போது தயவுசெய்து பொறுத்துக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். 

கடந்த எட்டு ஆண்டுகளில், எனது அரசு செய்த தவறுகள் நமது பொருளாதாரத்தை பாதித்துள்ளது. முதல் தவறு பணமதிப்பிழப்பு. பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் கறுப்புப் பணம் ஒழியும், ஊழல்  குறையும். பயங்கரவாதம் ஒழியும்  என்று எனக்கு அறிவுறுத்தப்பட்டது. ரிசர்வ் வங்கி ஆளுநரின் எச்சரிக்கையை நான் மதிக்கவில்லை. பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் எந்த நோக்கமும் அடையப்படவில்லை. மாறாக, பணமதிப்பு நீக்கம் வளர்ச்சி விகிதத்தை பின்னுக்குத் தள்ளியது, பெரும் வேலை இழப்பை ஏற்படுத்தியது மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக, லட்சக்கணக்கான  குறுந்தொழில் மற்றும் நடுத்தர தொழில்கள் மூடப்பட்டன.

அடுத்த தவறு ஜிஎஸ்டி சட்டங்கள் மோசமாக உருவாக்கப்பட்டு அவசர கோலத்தில் நிறைவேற்றியது.  தலைமைப் பொருளாதார ஆலோசகர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களின் ஆலோசனையை ஏற்று, மிதமான, ஒரே வரியான ஜிஎஸ்டியை நான் ஏற்றுக் கொண்டிருக்கலாம்.  மத்திய அரசிடம் தன்னிச்சையான அதிகாரங்களை அளித்து, மத்திய அரசுக்கும் மாநிலங்களுக்கும் இடையே கடும் அவநம்பிக்கையை உருவாக்கி, வணிக மற்றும் வர்த்தக சமூகத்தினரிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்திய, பணவீக்கத்தைத் தூண்டும் சட்டத்தில் சிக்கிக் கொண்டு விட்டோம்.  நான் இறங்க முடியாத புலியில் ஏறி விட்டேன். இனி அதிலிருந்து இறங்கவும்  முடியாது.   புகழ் பெற்ற பொருளாதார நிபுணர்கள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்களுடன் கலந்தாலோசித்து, தற்போதைய ஜிஎஸ்டிக்கு பதிலாக ஜிஎஸ்டியின் அடுத்த தலைமுறை சட்டத்தை கொண்டு வரலாம் என எண்ணுகிறேன்.

தவறுகளில் இருந்து   விலகுவேன்

நான் பல்வேறு தவறுகளை செய்தேன்.  ஆனால் சில எதிர்ப்புகளுக்கு பிறகு, நான் என் நடவடிக்கையை  திரும்பப் பெற்றேன். புதிய நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் எனது முயற்சி காலப்போக்கில் கைவிடப்பட்டது. அதேபோல், மூன்று விவசாயச் சட்டங்களும் அடிப்படையில் தவறானவை என்பதை உணர்ந்து, அவற்றை ரத்து செய்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். தேசிய மக்கள் தொகைப் பதிவேடு (என்பிஆர்), குடியுரிமை (திருத்தம்) சட்டம் (சிஏஏ) மற்றும் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட அக்னிபாத் திட்டம் போன்ற   தவறுகளும் உள்ளன . மக்களை  மதரீதியாக பிரிக்கும் மற்றும்  மோதலை ஊக்குவிக்கும் இந்த தவறான செயல்களில் இருந்து விரைவில் விலகுவேன் என்று உறுதியளிக்கிறேன்.

என்  சகோதர  சக குடிமக்களே! வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தின் வரம்பைக் கட்டுப்படுத்தவோ அல்லது ஒரே மாதிரியான சிவில் சட்டத்தை அறிமுகப்படுத்தவோ சில தரப்புகளின் அழுத்தங்களுக்கு அடிபணிய மாட்டேன் என்று  நான் உறுதியளிக்கிறேன். பாராளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கான அரசியலமைப்பு திருத்த மசோதாவை மீண்டும் அறிமுகப்படுத்துவேன் என்று உறுதியளிக்கிறேன். ஜிஎஸ்டி விகிதங்கள், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான பங்கு அல்லாத வரிகள்  மற்றும் சமையல் எரிவாயு விலையை குறைப்பேன் என்றும் உறுதியளிக்கிறேன்.

உறவுக்கு பாலம்

கடந்த காலங்களில், எனது அரசாங்கம் தொடங்கிய பல்வேறு முயற்சிகள் குறித்து நானும் எனது அமைச்சர்களும் கூறியுள்ளோம்.உரிமை கொண்டாடியிருக்கிறோம்.  ஒவ்வொரு குடிமகனின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவதாக உறுதியளித்திருந்தேன். ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று நான் உறுதியளித்தேன். இவை தேர்தல் காலத்தில் தரப்பட்ட வாக்குறுதிகள்.  இந்த இடத்தில் இருந்து கொண்டு  2022க்குள் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கப்படும்  ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு வீடு இருக்கும் என்றும் சொல்லியிருந்தேன். இவை இன்னும் செயல்பாட்டில் உள்ளன என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். இந்தியா திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாத நாடு என்றும், ஒவ்வொரு வீட்டிற்கும் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது என்றும் கூறியிருந்தேன். இந்தக் கூற்றுக்கள் உண்மையல்ல. கிராமப்புற குடும்பங்களில் 25.9 சதவீதமும், நகர்ப்புற குடும்பங்களில் 6 சதவீதமும் கழிப்பறை வசதி  இல்லாதவை என தேசிய குடும்பசுகாதார அறிக்கை தெரிவிக்கிறது.  கணக்கெடுக்கப்பட்ட 30 மாநிலங்களில் எதுவும் திறந்தவெளி கழிப்பறை இல்லாத மாநிலங்களாக  அறியப்  படவில்லை.  2020 ஆம் ஆண்டில் ஸ்மார்ட் பவர் இந்தியா மற்றும் NITI ஆயோக் நடத்திய ஆய்வில், 13 சதவீத மக்கள் வீடுகளுக்கு மின் இணைப்பு தரப்படவில்லை என்று கண்டறிய பட்டுள்ளது.  இந்த இலக்குகளை அடைய முதலமைச்சர்களுடன் ஆலோசனை செய்து, திருத்தப்பட்ட  தேதிகளை அறிவிப்பதாக உறுதியளிக்கிறேன்.

எனது  முதல் மற்றும் முதன்மையான கவலை வளர்ந்து வரும் வகுப்புவாத பிரிவினை  என்றே சொல்லலாம்.  அனைத்து மக்களும்,  குறிப்பாக பெண்கள், தலித் மக்கள், முஸ்லிம்கள் மற்றும் பழங்குடியினர் – என பல்வேறு வகையினரும்  பாதுகாப்பாக  உணர்ந்து முன்னேற்றத்தின் பலனைப் பகிர்ந்து கொள்ளும் வரை எந்த நாடும் முன்னேற முடியாது.   மேலும் முன்னேற்றத்தின் பலனைப் பகிர்ந்து கொள்ள முடியும். எனது கட்சி தனது தப்பெண்ணங்களைக் கைவிட வேண்டும் மற்றும் எனது அரசாங்கம் பிளவுபடுத்தும் சொல்லாட்சிகளுக்கு இறுதியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும், வெறுப்பை ஊக்குவிப்பவர்களைத் தண்டிக்க வேண்டும், இந்தியாவின் பன்முகத்தன்மை மற்றும் பன்மைத்துவத்தைக் கொண்டாடி, நமது அரசாங்கத்தையும் நிறுவனங்களையும் மேலும் உள்ளடக்கியதாகவும், பிரதிநிதித்துவமாகவும் மாற்ற வேண்டும் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன்.

சகோதர சகோதரிகளே ! நமது பயணம் நீண்டது.  இந்த மகத்தான நாட்டிற்கும், இந்திய மக்கள் அனைவருக்கும் சேவை செய்வதற்கு நான் உறுதியளிக்கிறேன், மேலும் இந்த வரலாற்றுப் பயணத்தில் என்னுடன் சேருமாறு  உங்களுக்கு வேண்டுகோள் வைக்கிறேன். 

ஜெய் ஹிந்த்!

தமிழில் : த. வளவன்

source https://tamil.indianexpress.com/opinion/modi-indepdence-day-speech-panch-pran-p-chidambaram-499051/