23 8 2022
நபிகள் நாயகம் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த தெலங்கானா மாநில பாஜக எம்எல்ஏ டி. ராஜா சிங், கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.
மேலும் இதுதொடர்பாக செப்டம்பர் 2ஆம் தேதிக்குள் எழுத்துபூர்வமாக பதில் அளிக்க வேண்டும் எனவும் பாஜக உயர்மட்ட குழு உத்தரவிட்டுள்ளது.
கோஷாமஹால் எம்.எல்.ஏ.வுக்கு அனுப்பப்பட்ட கடிதம் குறித்து, பாஜகவின் மத்திய ஒழுங்குக் குழுவின் உறுப்பினர் செயலர் ஓம் பதக், “பாஜகவின் அரசியலமைப்பு விதி XXV 10 (a) விதியை மீறும் பல்வேறு விஷயங்களில் கட்சியின் நிலைப்பாட்டிற்கு முரணான கருத்துகளை நீங்கள் வெளிப்படுத்தியுள்ளீர்கள்.
மேலும் உங்கள் மீதான விசாரணை நிலுவையில் உள்ளதால், நீங்கள் கட்சியில் இருந்தும், உங்கள் பொறுப்புகளில் இருந்தும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளீர்கள்.
இதனை நான் உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். உங்களை ஏன் கட்சியில் இருந்து நீக்கக்கூடாது என்பதற்கான காரணத்தை நீங்கள் 10 நாட்களுக்குள் தெரிவிக்கவும்” என்றார்.
முன்னதாக, ஹைதராபாத் போலீஸார், ராஜா சிங்கை அவரது வீட்டில் இருந்து காவலில் எடுத்தனர். முஸ்லீம் தலைவர்கள் தங்கள் சமூகத்தை இழிவுபடுத்துவதாகக் கூறும் ராஜா சிங்கின் வீடியோவையும் சமூக வலைதளம் உள்ளிட்டவற்றில் இருந்து நீக்கி வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ராஜா சிங் சமீபத்தில் ஹைதராபாத்தில் நிகழ்ச்சி நடத்திய ஸ்டாண்ட்-அப் நகைச்சுவை நடிகர் முனாவர் ஃபாரூக்கியைத் தாக்கிப் பேசும்போது இந்தக் கருத்தைத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
நபிகள் நாயகத்தைப் பற்றி அவர் குறிப்பிடவில்லை என்று கூறி, அதை “நகைச்சுவை வீடியோ” என்று அவர் கூற முயன்றாலும், முஸ்லீம் அமைப்புகளின் எதிர்ப்பைத் தொடர்ந்து அவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இது தொடர்பாக எம்எல்ஏ ராஜா சிங் அளித்த விளக்கத்தில், “நான் எந்த குறிப்பிட்ட சமூகத்தின் பெயரையும் கூறவில்லை. எந்த அடிப்படையில் காவல்துறை என் மீது எஃப்ஐஆர் பதிவு செய்தது என்பது எனக்கு புரியவில்லை.
எனது வீடியோ ஃபாருக்கியை இலக்காகக் கொண்டது, நான் எனது வார்த்தைகளில் உறுதியாக நிற்கிறேன், யாருடைய உணர்வுகளையும் நான் புண்படுத்தவில்லை. இது வீடியோவின் முதல் பகுதி, இரண்டாவது வீடியோவும் இருக்கும். அதையும் பாருங்கள்” என்று தெரிவித்துள்ளார்.
source https://tamil.indianexpress.com/india/bjp-suspends-telangana-mla-raja-singh-arrested-over-prophet-remark-498902/