திருச்சிக்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்ள தமிழக முன்னாள் முதல்வரும், தமிழக எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வந்திருந்தார். விமான நிலையம் அருகே உள்ள வயர்லெஸ் சாலையில் அவரை வரவேற்க திருச்சி அதிமுக மாநகர், புறநகர் நிர்வாகிகள் பிரம்மாண்ட ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
அதிமுக தெற்கு புறநகர் தெற்கு மாவட் செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான ப.குமார் தலைமையில் ஆயிரக்கணக்கான அதிமுகவினர் பிரம்மாண்ட மலர்மாலையை கிரேன் உதவியுடன் எடுத்து வந்து எடப்பாடிக்கு அணிவித்து அழகு பார்த்தனர்.
கடந்த 2011ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் பிரச்சார கூட்டத்திற்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா திருச்சிக்கு வந்தார். அப்போது திருச்சி ஜி கார்னா் மைதானத்தில் ஏற்பாடு செய்திருந்த பிரச்சார கூட்டம் பெருமளவில் பேசப்பட்டது. அதேபோல், இன்று திருச்சியில் நடைபெற்று வரும் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ளும் நிகழ்ச்சியையும் பெருமளவில் பேசும் பொருளாக்க மாற்ற வேண்டும் என திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான ப.குமார் தலைமையில் அதிமுகவினர் திட்டமிட்டு வேலை செய்தனர். அதற்கேற்றவாறு திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து வந்திருந்த திரளான அதிமுகவினர் எடப்பாடி பழனிசாமிக்கு பிரம்மாண்ட வரவேற்பை கொடுத்தனர்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்ந்து உச்சத்திலேயே இருக்கிறது. மூன்று மாதங்களாக ஓபிஎஸ் – இ.பி.எஸ் தரப்பில் உட்கட்சி மோதல் தொடர்ந்து வருகிறது. இதனால், ரத்தத்தின் ரத்தங்களான அதிமுகவினர், யாரை ஆதரிப்பது என்று தெரியாமல் முழித்து வருகின்றனர்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்குபின் ஓ.பி.எஸ்-ன் கைகள் ஓங்கியுள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்பு எவ்வித சலனமும் இல்லாமல் இன்று திருச்சியில் தனது தொண்டர்களை சந்தித்தார் எடப்பாடி பழனிசாமி.
அப்போது அவர் பேசியதாவது: தமிழகம் எல்லா விதத்திலும் ஓளிமயமாக, சிறக்க அடித்தளமிட்ட இருபெரும் தலைவர்கள் நம்முடைய பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி ஜெயலலிதா தான். இந்த இருபெரும் தலைவர்களால் தான் இன்றைய தமிழகம் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.
தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று 15 மாதங்களாகிறது என்ன செய்தீர்கள்? என்று மக்கள் கேட்கின்றனர். கடந்த காலங்களில் நான் முதல்வராக இருந்தபோது துவக்கிவைத்த திட்டங்களை இன்றைய திமுக முதல்வர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்துக்கொண்டிருக்கின்றார். அது மட்டும் தான் இப்போது செய்துகொண்டு அதிமுக அரசு துவக்கியதை தாம் திறந்து வைத்து சாதனை படைத்துக் கொண்டிருக்கிறார்.
திமுக அரசால் எந்த ஒரு புதிய திட்டமும் கொண்டுவரப்படவில்லை. ஏற்கனவே, நம்ம அம்மாவோட திட்டங்களைத்தான் இன்றைய முதல்வர் துவக்கி வைத்து சாதனை செய்ததாக பேசிக்கொண்டிருக்கின்றார். நேற்று கோயம்புத்தூரில் பேசிய ஸ்டாலின், திட்டங்கள் எல்லாம் முடங்கி போயிருக்கு என பேசுகின்றார். நாம், அதிமுக அரசு கொண்டு வந்த திட்டங்கள்தான் அனைத்தும். அதிமுக கொண்டு வந்த திட்டங்களை முடக்கி வைத்திருப்பதுதான் திமுக ஆட்சி.
திருச்சி அய்யன் வாய்க்கால் பாலம், திருவானைக்காவல், சத்திரம்பேருந்து நிலையம், சென்னை புறவழிச்சாலையை இணைக்கும் திருச்சி ரயில்வே பாலம், கொள்ளிடம் ஆற்றில் சென்னை நேப்பியார் பாலம் கட்டியது, ஓடத்தெரு ரயில்வே மேம்பாலம் என திருச்சியில் எல்லாம் கொண்டு வந்தது அம்மாவோட அதிமுக ஆட்சி தான்.” என்று கூறினார்
தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, ஸ்மார்ட் சிட்டி சீர்மிகு திட்டத்தில் கொண்டு வரப்பட்டதுதான் சத்திரம் பேருந்து நிலையம் என்றவர் பேருந்து நிலையம் இன்னும் திறக்காமல் இருப்பதுபோன்றே அதை சீக்கிரம் திறந்து வையுங்கள் என்றதால் திருச்சி மக்கள் வியப்பில் பார்த்தனர்.
மேலும், முக்கொம்புவில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே இருந்த கதவணை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டது. உடனடியாக 325 கோடி மதிப்பில் அதிமுக அரசு முக்கொம்புவில் அந்த இடத்திற்கு அருகாமையிலேயே மீண்டும் கதவணை பிரம்மாண்டமாக கட்டப்பட்டு திறப்பு விழாவுக்கு காத்துக்கொண்டிருக்கின்றது. திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் 11 கிலோ மீட்டர் அகலப்படுத்தும் பணி நடந்து கொண்டிருக்கிறது என்றும் கல்லூரிகள் திறந்தது, வண்ணத்துப்பூச்சி பூங்கா, யாத்ரி நிவாஸ் என அதிமுக கொண்டு வந்த பல்வேறு திட்டங்களை நினைவு கூர்ந்து பேசினார்.
இவை அனைத்தும் அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டம் என்பதாலேயே அது திறக்கப்படாமல் இருக்கு, அதை வேகமாக திறந்து வையுங்கள். அந்த பாக்கியத்தை மக்கள் உங்களுக்கு கொடுத்திருக்காங்க என்றார்.
ஆன்லைன் ரம்மி செய்ததுதான் மிச்சம். ஆன்லைன் ரம்மி அதன்மூலம் சரியாக துட்டு வந்துகொண்டிருக்கிறது வீட்டிற்கு. அது சிந்தாமல் சிதறாமல் யாருக்கு போய் சேர வேண்டுமோ, அஙகுபோய் சேர்ந்துகொண்டிருக்கிறது.
மக்களுக்கு நன்மை கிடைக்கிற எந்த திட்டத்தையும் இந்த திமுக அரசு இதுவரை செய்யவில்லை. காரணம் தினந்தோறும் முதல்வர் போட்டோஷூட், முதல்வர் செல்வார், படம் பிடிப்பார்கள் தொலைக்காட்சியில் காட்டுவார்கள், பத்திரிகைகள் வரும், இதுதான் அன்றாட நிகழ்ச்சி. மக்களுக்கு நன்மை பயக்கக்கூடிய எந்த திட்டத்தையும் கொண்டுவரவில்லை. எந்த திட்டத்தையும் நிறைவேற்றவும் இல்லை. அதனால் நமக்கு என்ன பலன்.
நிதியே இல்லை, என்று கூறிவிட்டு எழுதாத பேனாவை ஏன் வைக்கிறீர்கள் என்று எல்லோரும் கேட்கின்றனர். பேனா வையுங்கள் வேண்டாம் என்று கூறவில்லை. ரூ.1 கோடியில் பேனா வையுங்கள். ஏனெனில், அவர் கட்சியின் தலைவராக இருந்தார், முதல்வராக இருந்தார், நினைவு மண்டபம் கட்டுங்கள் நாங்கள் வேண்டாமென்று கூறவில்லை. ஆனால், 80 கோடியில் பேனா வைக்க வேண்டுமா? கடலில் பேனா வைக்கும் செலவில், தமிழகத்தில் ஆறரை கோடி மக்களுக்கு பேனா வாங்கி கொடுத்து விடலாம்.
இன்றைக்கு நிதியே இல்லை என்று கூறிவரும் இந்த அரசாங்கத்துக்கு 80 கோடியில் பேனா வைக்கும் அளவுக்கு எப்படி நிதி வந்தது என்று மக்கள் கேட்கின்றனர்” என்று அவர் கூறினார்.
இந்த ஆட்சி வந்த பிறகு என்ன செய்தாங்க என்றால் நல்லா எல்லாத்துக்கும் பெரிய போனஸ் கொடுத்திருக்காங்க, அதாவது சொத்து வரி போனஸ், மின் கட்டண உயர்வு போனஸ், தண்ணீர் வரி போனஸ் என திருச்சி மக்களுக்கு பெரும் போனஸை திமுக அரசு கொடுத்திருக்கு.
சொத்து வரி உயர்வு மூலம் நீங்க ஏற்கனவே வருசத்துக்கு ரூ.2 ஆயிரம் கட்டினா, இப்போ ரூ.4 ஆயிரம் கட்டணும், ஓட்டு போட்டதுக்கு நாம ரூ.2 ஆயிரம் தண்டம் அழனும். கடந்த 2 ஆண்டு காலமாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மக்கள் வாழ்வாதாரம் இழந்திருக்கும் நிலையில் இந்த வரி உயர்வு தேவையா? மக்கள் தலையில் கடும் சுமையை சுத்தியிருக்கிறது திமுக அரசு.
மின்கட்டண உயர்வு 50 சதவீதம் உயர்த்தினா எப்படி தாக்கு பிடிப்பாங்க, தொழிற்சாலைக்கும் மின் கட்டண உயர்வால் தொழிற்சாலைகள் அண்டை மாநிலத்துக்கு போகும் அபாயம் எழுந்திருக்கு. திமுக அறிக்கையில் குறிப்பிட்டதுபோல் 4.8 லட்சம் கோடி கடன் இருப்பதாக தேர்தல் நேரத்தில் சொல்லிட்டு, நிதி இல்லைன்னு தெரிஞ்சும் தேர்தல் அறிக்கையிலேயே நீங்க எப்படி குறிப்பீட்டிங்க.
மாதம் தோறும் உரிமைத்தொகை ரூ.1000 என்னாச்சு, சிலிண்டருக்கு மானியம் ரூ.100 கொடுத்தாங்களா, இல்லையே, மாணவர்களுக்கு கல்விக்கடன் கொடுப்பதா சொன்னாங்க செய்தாங்களா, ஒன்னும் இல்ல என திமுகவின் தேர்தல் அறிக்கையினை பட்டியலிட்டு செய்யாதவைகளை சுட்டிக்காட்டி பேசினார். விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு வெள்ளம் உள்ளிட்ட ஏதாவது பிரச்சனை என்றால் ஓடோடி பார்த்தது நம்ம ஆட்சிகாலத்துல நான் தான் போய் பார்த்தேன். விவசாயிகளை பாதுகாத்த அரசாங்கம் நம்ம அரசாங்கம் என்றார்.
பின்னர் அதிமுக அலுவலகத்தை ஓபிஎஸ் தலைமையிலான கட்சி துரோகிகள் அம்மா அலுவலகத்தை காலால் எட்டி உதைத்து, கதவை உடைத்து எல்லாத்தையும் எடுத்துட்டுப் போனாங்க என தமது உட்கட்சி பிரச்சனைகள் குறித்தும் பேசினார்.
உயிரோட்டமுள்ள இயக்கம் அதிமுக, மக்களுக்காக பாடுபடுகின்ற இயக்கம் அதிமுக, வேண்டுமென்றே சில பேர் திட்டமிட்டு திமுகவுடன் கை கோர்த்து கூட்டணி போட்டுக்கொண்டு அதிமுகவை அழிக்க நினைக்கின்றனர். நான் தலைவனாக வரவில்லை, அதிமுகவில் கட்சி தொண்டனாக இருந்து உங்கள் முன் தலைவனாக உங்கள் விருப்பத்தின் பேரில் வந்திருக்கேன்.
இன்றைக்கு நிலைமை மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறியிருக்கின்றது. நான் முதல்வராக இருந்தபோது அதிமுகவுக்கு எதிர்த்து ஓட்டு போட்டவர்தான் ஓபிஎஸ். நன்றி மறந்தவர் தான் அவர். 1989-ல் கட்சி பிளவுபட்டபோது போடியில அம்மா போட்டியிடுறாங்க, அப்ப எதிர்த்து போட்டியிட்ட ஒருவருக்கு ஏஜெண்ட்டாக இருந்தவர்தான் அவரு எனும்போது அவர் எப்படி அம்மாவுக்கு விசுவாசியா இருக்க முடியும் என்றார்.
இந்த இயக்கத்தை காக்கக்கூடிய பொறுப்பில் இருக்கக்கூடிய ஒருவர் எப்படியெல்லாம் கட்சிக்கு விசுவாசமில்லாமல் இருந்தார் என உங்களுக்கு தெரியும். எப்படி அவர நாம் மீண்டும் இணைக்க முடியும். அதிமுகவை இவரைப்போல் எத்தனைப்பேர் வந்தாலும் யாரும் ஆட்டி அசைக்க முடியாது. நம்மிடத்தில் இருக்கும் எல்லோரும் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர்களாக, விசுவாசிகளாக இருப்பவர்கள் என பேசினார்.
எடப்பாடி பழனிசாமியை முன்னாள் அமைச்சர்கள் சிவபதி, பரஞ்சோதி, வளர்மதி, முன்னாள் எம்.பி.க்கள் ப.குமார், ரத்தினவேல், முன்னாள் மாநகர துணைமேயர் சீனிவாசன், ஆவின் கார்த்தி உள்ளிட்டோர் அவரை வரவேற்றனர்.
எடப்பாடி பழனிசாமி திருச்சி வருகையால் திருச்சி விமான நிலையம் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. டெல்டாவில் கெத்து காட்ட நினைத்த எடப்பாடிக்கு திருச்சி புறநகர், மாநகர், பிற மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் திரண்டு வந்து கெத்து காட்டிய மன நிறைவுடனே சென்னை திரும்புகிறார் எடப்பாடி எனலாம்.
செய்தி: க.சண்முகவடிவேல் – திருச்சி
source https://tamil.indianexpress.com/tamilnadu/eps-questions-when-tamil-nadu-govt-has-no-funds-does-pen-symbol-for-karunanidhi-need-rs-80-crore-501356/