சனி, 27 ஆகஸ்ட், 2022

இறால் பண்ணைகளை மூட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: விவசாயிகள் சங்கம்

 

திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளை செயல்படுத்தவில்லை என தமிழ்நாடு விவசாய சங்க மாநில பொதுச்செயலாளர் சண்முகம் குற்றம்சாட்டியுள்ளார்.

நாகை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், விவசாயிகள் சங்கத்திற்கான மாநில மாநாட்டு லோகோவை கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி வெளியிட விவசாய சங்க தலைவர்கள் பெற்றுக்கொண்டனர்.
அதனை தொடர்ந்து தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் சண்முகம் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், “தமிழ்நாடு விவசாய சங்கத்தின் 30ஆவது மாநில மாநாடு செப்டம்பர் 17,18,19 ஆகிய 3 தினங்கள் நாகையில் நடைபெறுகிறது. மாநிலம் முழுவதுமுள்ள 50,000 விவசாயிகள் பங்கேற்க உள்ளனர். மாநாட்டில் மின்சார திருத்த சட்ட மசோதாவை ஒன்றிய அரசு தாக்கல் செய்ததற்கு கண்டனம், மின்சார திருத்த சட்டம் வந்தால் விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சார திட்டங்கள் நிறுத்தப்படும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன” என்று விவரித்தார்.


தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்தால் 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் அறிவித்தார்கள், வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. குறிப்பாக நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு 2,500 ரூபாய் மற்றும் கரும்புக்கு டன்னுக்கு ரூ.4000 வழங்கவில்லை எனவும் குற்றம் சாட்டினார்.

மேலும் தமிழ்நாட்டில் வளர்ச்சி திட்டங்கள் என்ற பெயரில் விவசாயிகளின் ஒப்புதல் இல்லாமல் விவசாய நிலங்களில் பல்வேறு பணிகள் நடைபெறுகிறது. அதனை தமிழக முதல்வர் தடுத்து நிறுத்த வேண்டும். நாகை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இறால் பண்ணைகளால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுகிறது. எனவே இறால் பண்ணைகளை மூடுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

source https://news7tamil.live/tamil-nadu-govt-should-take-steps-to-close-shrimp-farms-farmers-association.html