காங்கிரஸ் காரியக் கமிட்டி ஞாயிற்றுக்கிழமை கட்சித் தலைவர் பதவிக்கான தேர்தலை அக்டோபர் 17 ஆம் தேதி நடத்த முடிவு செய்தது. ராகுல் காந்தி மீது மோசமான குற்றச்சாட்டுகளை சுமத்தி, குலாம் நபி ஆசாத் கட்சியில் இருந்து வெளியேறினார். ஜி-23 தலைவர் ஆனந்த் சர்மா, வாக்காளர் பட்டியல் குறித்து கேள்விகளை எழுப்பியதையடுத்து, காங்கிரஸ் கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டது.
காங்கிரஸ் கட்சி வாக்காளர் பட்டியலில் உறுப்பினர்களாக உள்ள 9,000-க்கும் மேற்பட்ட மாநில காங்கிரஸ் கமிட்டி பிரதிநிதிகள் குறித்து எந்த தெளிவும் இல்லை. இதனால், காங்கிரஸ் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான செயல்முறையின் உண்மைத் தன்மையை கேள்வி எழுப்புவதாக உள்ளது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மேலும் தெளிவுபடுத்த வேண்டிய அவசியம் குறித்த கேள்விக்கு உடன்பட்டதாக தெரிகிறது.
இருப்பினும், காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டம் முடிந்த உடனேயே, இதுபோன்ற கேள்விகள் யாராலும் எழுப்பப்படவில்லை என்று காங்கிரஸ் கட்சி மறுத்தது. ஆனந்த் சர்மா, இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் இந்த விஷயத்தை எழுப்பியதாகவும், தனது கோரிக்கைக்கு ஆதரவாக நின்றதாகவும் கூறினார்.
குறிப்பிடத்தக்க வகையில், காங்கிரஸ் காரியக் கமிட்டி தேதிகளை அறிவித்தவுடன், முன்னாள் மகாராஷ்டிர முதல்வரும் மற்றொரு ஜி-23 உறுப்பினருமான பிருத்விராஜ் சவான் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறுகையில், “ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தலைவர் பதவிக்கு போட்டியிட்டால் நாங்கள் மகிழ்ச்சியடைவோம். சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் போட்டியிட முன்வரவில்லை என்றால், யாராவது ஒருவரை ‘பொம்மைத் தலைவராக’ ஆக்கினால் கட்சி உருப்படாது.” என்று கூறினார்.
சோனியா காந்தி மருத்துவப் பரிசோதனைக்காக தனது மகன் ராகுல் காந்தி, மகள் பிரியங்கா காந்தியுடன் வெளிநாட்டில் இருக்கிறார். அதனால், சோனியா காந்தி காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டத்தில் காணொலி வழியாக பங்கேற்றார். காங்கிரஸ் கட்சி தேர்தல் நிர்வாகத்தின் தலைவர் மதுசூதன் மிஸ்திரி முன்வைத்த தேர்தல் நடத்துவதற்கான தேதிகளை ஒருமனதாக ஏற்றுக்கொண்டார்.
தேர்தல் கட்சி அறிவித்துள்ள அட்டவணையின்படி, வேட்புமனு தாக்கல் செய்ய செப்டம்பர் 24 முதல் செப்டம்பர் 30 வரை கால அவகாசம் உள்ளது. வேட்புமனுவை வாபஸ் பெற கடைசி நாள் அக்டோபர் 8 ஆம் தேதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்கள் இருந்தால் அக்டோபர் 17 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும் அக்டோபர் 19ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் தலைவர் பதவிக்கு கடைசியாக 2001-ம் ஆண்டு சோனியாவை எதிர்த்து ஜிதேந்திர பிரசாத் போட்டியிட்டபோதுதான் கடைசியாக காங்கிரஸ் கட்சியில் தலைவர் பதவிக்கு போட்டி நடந்தது.
காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கான தேர்தல் வாக்காளர் பட்டியலில், மாநில காங்கிரஸ் கமிட்டிகளின் பிரதிநிதிகளைக் கொண்டுள்ளது. வாக்குச்சாவடி, தொகுதி அல்லது மாவட்டக் குழுக்கள் அல்லது பிசிசி கூட்டங்கள் எதுவும் நடைபெறவில்லை என்று தனக்கு நிறைய புகார்கள் வந்ததை சுட்டிக்காட்டி, பிரதிநிதிகள் தேர்தல் குறித்து மிஸ்திரி விளக்க வேண்டும் என்று சர்மா கூறியதாகத் தெரிகிறது. அப்போது பட்டியல்கள் எப்படி தயாரிக்கப்பட்டது என்று ஆனந்த் சர்மா கேட்டுள்ளார்.
இது தேர்தல் செயல்முறையின் உண்மைத் தன்மையை மீறுவதாக உள்ளது என்று கூறிய சர்மா, வேட்புமனு தாக்கல் செயல்முறை தொடங்கும்முன் ஒவ்வொரு குழுவிற்கும் பட்டியல்கள் கிடைக்க வேண்டும் என்றார். இதற்கு சோனியா பரிந்துரைகள் நிறைவேற்றப்படும் என்று கூறியதாகத் தெரிகிறது.
வாக்காளர் பட்டியல் மாநில காங்கிரஸ் கமிட்டிகளுக்கு கிடைக்கும் என்றும், தேர்தல் நடத்தும் அதிகாரிகள் ஏற்கனவே பட்டியல்களைச் சரிபார்த்து கையெழுத்திட்டுள்ளனர் என்றும் மிஸ்திரி பதிலளித்ததாக கூறப்படுகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய விரும்புவோருக்கும் பட்டியல் வழங்கப்படும் என்று அவர் கூறினார்.
வேட்புமனு தாக்கல் தொடங்கும்முன் மாநில காங்கிரஸ் கமிட்டிகளுக்கு வாக்காளர் பட்டியல் கிடைக்கும் என்று மிஸ்திரி கூறியது, ஒரு மாநிலத்தின் பிரதிநிதிகள் யார் என்பது மாநில காங்கிரஸ் கமிட்டிகளுக்குகூட தெரியாது என்பதை உறுதிப்படுத்துவதாக ஜி-23 தலைவர்களில் சிலர் தெரிவித்தனர்.
காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளர் தகவல் தொடர்புக்கு பொறுப்பு வகிக்கும் ஜெய்ராம் ரமேஷ் “காங்கிரஸ் காரியக் கமிட்டியில் எந்த கேள்வியும் எழுப்பப்படவில்லை” என்று அறிவித்தார்.
செய்தியாளர்கள் சந்திப்பின்போது ஜெய்ராம் ரமேஷ் மைக்ரோஃபோனை மிஸ்திரியிடம் கொடுத்தார், அவர் சுவாரசியமாக கூறினார்: “இந்தக் கேள்விகளை எழுப்பியவர்கள், அதே செயல்முறையைக் கடந்து வந்திருக்கிறார்கள், அதுதான் பின்பற்றப்பட்டது. அவர்கள் அதில் கட்சியின் கருத்தில் இருந்தனர். அதனால், நான் அதிகம் சொல்ல வேண்டியதில்லை.” என்று கூறினார்.
தேர்தல் கல்லூரியில் கிட்டத்தட்ட 9000 பிரதிநிதிகள் உள்ளனர் என்று மிஸ்திரி மேலும் கூறினார்.
ஆகஸ்ட் 21 முதல் செப்டம்பர் 20 வரை சோனியா காந்திக்கு பதிலாக ஒரு புதிய தலைவரை கட்சி தேர்ந்தெடுக்க இருந்தது. ஆனால், இப்போது தேர்தல் நடைமுறை அக்டோபர் வரை நீட்டிகப்பட்டுள்ளது. ரமேஷ் மற்றும் மிஸ்திரியுடன் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் அமைப்பு பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், இதுபற்றி கேட்டதற்கு, “நிறைய பிரச்சினைகள் உள்ளன… போராட்டங்கள், நிகழ்ச்சிகள் மற்றும் மாநில காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் குறித்த இறுதி முடிவு… சரியான வழி… இது மிகவும் இயற்கையானது… அடிப்படையில் 28 நாள் தாமதமாக நடக்கிறது” என்று கூறினார்.
வேணுகோபால் மேலும் கூறுகையில், இது ஓபன் தேர்தல் என்றும், யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம் என்றும் கூறினார். காங்கிரஸின் அரசியலமைப்புச் சட்டத்தின்படி, ஒருவர் வேட்பாளராக போட்டியிடத் தகுதி பெறுவதற்கு 10 மாநில காங்கிரஸ் கமிட்டி பிரதிநிதிகள் அவரது பெயரை முன்மொழிய வேண்டும். ராகுல் காந்தியை போட்டியிட வற்புறுத்தும் முயற்சிகள் குறித்த கேள்விக்கு வேணுகோபால் கூறியதாவது: இப்போது தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டது. காங்கிரஸ் தலைவராகப் போட்டியிட விரும்புவோர் செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும்” என்று கூறினார்.
தலைவர் உட்பட அனைத்து பதவிகளுக்கும் தேர்தல் நடத்தப்படும் ஒரே அரசியல் கட்சி காங்கிரஸ் என்று ரமேஷ் கூறினார். “இதே போல, தேர்தல்கள் நடந்தன. நடக்கும், தொடர்ந்து நடைபெறும்” என்று அவர் கூறினார்.
பின்னர், செய்தியாளர் முடிந்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, ஜெய்ராம் ரமேஷ் பதிவிட்ட ட்வீட்டில், “இன்று காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் செயல்முறை மற்றும் அட்டவணை குறித்து கேள்விகள் எழுப்பப்பட்ட சில சந்தேகத்திற்குரிய ‘ஆதார அடிப்படையிலான’ சலசலப்பு நடக்கிறது. யாரும் எந்தக் கேள்வியையும் சந்தேகத்தையும் எழுப்பவில்லை என்பதை இது முற்றிலும் தெளிவுபடுத்துகிறது என்று தெரிவித்தார்.
ஜெய்ராம் ரமேஷ் ட்வீட் பற்றி கேட்டபோது, ஆனந்த் சர்மா தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் “நான் வாக்காளர் பட்டியல் பிரச்சினையை எழுப்பினேன் என்பதை என்னால் உறுதிப்படுத்த முடியும்” என்று கூறினார்.
ஆனந்த் சர்மா, தான் தேர்தல் அட்டவணையை ஆமோதித்ததாகவும், ஆனால் அனைத்து மாநில காங்கிரஸ் கமிட்டிகள் மற்றும் பிற குழுக்களுக்கும் பிரதிநிதிகளின் இறுதிப் பட்டியலை வழங்குமாறு மிஸ்திரியிடம் கேட்டுக் கொண்டதாகவும், இந்த குழுக்களின் கூட்டங்கள் பட்டியல்களை வரைவதற்கு நடத்தப்படவில்லை என்றும் புகார்கள் இருப்பதாகவும் கூறினார்.
காங்கிரஸ் தலைவர் தனது கருத்தை பதிவு செய்து, வாக்காளர் பட்டியல் கிடைக்க வேண்டும் என்று கூறியதாக ஆனந்த் சர்மா கூறினார். மாநில காங்கிரஸ் கமிட்டி மற்றும் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களுக்கு பட்டியல் வழங்கப்படும் என்று மிஸ்திரி கூட்டத்தில் கூறினார்.
சவான் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறுகையில், காங்கிர தலைவர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டதில் மகிழ்ச்சி அடைவதாக கூறினார்.
“காங்கிரஸ் கட்சியின் அனைத்து அணிகளும் தேர்தல் மூலம் நிரப்பப்பட வேண்டும், வேட்புமனுக்கள் மூலம் அல்ல” என்று அவர் கூறினார். இருப்பினும், “ஒரு பொம்மை தலைவர் இருக்கக்கூடாது, உண்மையான தேர்தல் நடக்க வேண்டும்” என்று அவர் மேலும் கூறினார்.
காந்தியடிகள் கெஹ்லாட்டின் பின்னால் தங்கள் எடையை தூக்கி எறிய முடிவு செய்ததாக கூறப்படுகிறது, ஆனால் அவர் முடிவு செய்யவில்லை என்று கூறப்படுகிறது. அவர் முதலமைச்சராக தொடர விரும்புவதாக சில தலைவர்கள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர். “அவர் முதலமைச்சராகத் தொடர அனுமதிக்கப்பட்டால் அல்லது அவர் விரும்பும் நபர் முதல்வராக இருந்தால் அவர் பொறுப்பேற்கத் தயாராக இருக்கிறார்” என்று ஒரு தலைவர் கூறினார்.
சவானிடம் அசோக் கெலாட்டைப் பற்றி கேட்டதற்கு, அவருடைய பெயருக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று கூறினார். “தேர்தல் வேண்டும் என்று நாங்கள் கேட்டுக் கொண்டிருக்கிறோம். ராகுல் காந்தி கூறியது போல் ராகுல் காந்தியோ அல்லது அவர் குடும்பத்தைச் சேர்ந்த யாரோ தலைவராக இருக்கப் போவதில்லை என்றால்… அவருடைய கருத்துக்களுக்கும் விருப்பங்களுக்கும் நாம் மதிப்பளிக்க வேண்டும். எங்களால் நீண்ட நாள் பதவியை காலியாக வைத்திருக்க முடியாது… யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம்… கெலாட் தயாராக இருப்பதாக யாராவது சொன்னால், அவர் போட்டியிட்டால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைவோம். அவர் மிகவும் மூத்த காங்கிரஸ்காரர், நிர்வாகம், அமைப்பு, கட்சி, ஒட்டுமொத்தத் துறையிலும் அனுபவம் கொண்டவர். அவர் போட்டியிட்டால் நல்லது.” என்று கூறினார்.
29 8 2022
source https://tamil.indianexpress.com/india/congress-president-election-october-17-sonia-gandhi-and-rahul-gandhi-501843/