சனி, 20 ஆகஸ்ட், 2022

செல்போன் சார்ஜர் வெடித்து தீ விபத்து; இளைஞர் உயிரிழப்பு

 

 

கோபிசெட்டிபாளையம் அருகே செல்போன் சார்ஜர் வெடித்ததில் ஏற்பட்ட தீ விபத்தில் பட்டதாரி வாலிபர் அர்ஜூன் என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கூலை மூப்பனூரை சேர்ந்தவர் அர்ஜூன். பி.ஏ பட்டதாரியான இவர் கூலி வேலை செய்து வந்தார். நேற்று இரவு தனது இரண்டாவது மகன் திவினை  சிறிது தூரத்தில் உள்ள தாயார் கனகராணியின் வீட்டில் விட்டு விட்டு தனது வீட்டிற்கு வந்துள்ளார்.


வீட்டில் மனைவி கஸ்தூரியும், மூத்த மகன் யஸ்வந்த்தும் தூங்கிக் கொண்டிருக்க அருகே இருந்த தகர வீடு ஒன்றில் அர்ஜூன் தூங்கி உள்ளார். தூங்கும் போது செல்போனை சார்ஜ் போடுவதை வழக்கமாக வைத்து இருந்துள்ளார். நள்ளிரவில் செல்போன் சார்ஜர் வெடித்ததில் ஏற்பட்ட தீ குடிசையில் பரவியது. தீ விபத்தில் குடிசை வீட்டை விட்டு வெளியேற முடியாத நிலையில் அர்ஜூன் வீட்டின் உள்ளேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு தூங்கிக் கொண்டிருந்த மனைவி கஸ்தூரி மற்றும் அருகில் இருந்தவர்கள் வருவதற்குள் சுற்றிலும் தென்னை ஓலையால் மறைக்கப்பட்டு இருந்ததாலும் தீ கொழுந்து விட்டு எரிந்ததாலும் அர்ஜூனை காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டது. தீ விபத்து குறித்து சிறுவலூர் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் செல்போன் சார்ஜர் வெடித்து இருப்பது தெரிய வந்தது.


source https://news7tamil.live/cell-phone-charger-explodes-and-causes-fire-youth-mortality.html