புதன், 24 ஆகஸ்ட், 2022

‘தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு’ – இந்திய வானிலை ஆய்வு மையம்

 

தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்குக் கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், தேனாம்பேட்டை, மயிலாப்பூர், அண்ணாசாலை, சேப்பாக்கம், திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில மணி நேரத்திற்கு முன்பாக பரவலாக இடியுடன் கூடிய மழை பெய்தது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக வருகின்ற 25-ஆம் தேதி வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் சென்னையில் பல்வேறு இடங்களில் அதிகாலை முதல் மழை பெய்தது.

அதனைத்தொடர்ந்து, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், திருவாரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, தூத்துக்குடி, தென்காசி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, இராமநாதபுரம், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அதன்படி, பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.

இந்நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்மேற்கு பருவமழை காலத்தில் தமிழ்நாடு பகுதியின் மேல் தொடர்ந்து வீசக்கூடிய மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக மழை பெய்து வருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில், அதாவது டெல்டா மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் அடுத்து வரக்கூடிய ஐந்து நாட்களுக்குக் கனமழை தொடர வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கடந்த 24 மணி நேரத்தில், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், நாமக்கல், பெரம்பலூர், திருவாரூர், தஞ்சாவூர், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் கனமழை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.


source https://news7tamil.live/heavy-rain-likely-in-tamil-nadu-for-next-5-days-india-meteorological-department.html