வெள்ளி, 26 ஆகஸ்ட், 2022

சர்ச்சை கருத்து-தெலங்கானா பாஜக எம்எல்ஏ மீண்டும் கைது

 


நீதிமன்றத்தின் தடையையும் மீறி, வகுப்புவாதம் குறித்த வீடியோவை வெளியிட்ட சில மணிநேரங்களுக்குப் பிறகு, தெலங்கானா பாஜக எம்எல்ஏ டி.ராஜா சிங்கை காவல் துறையினர் மீண்டும் கைது செய்தனர்.

தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ், இன்று மீண்டும் அவர் கைது செய்யப்பட்டார். அவர் தனது புதிய வீடியோவில் அமைச்சர் கே.டி.ராமா ராவை கடுமையாக தாக்கி பேசியிருந்தார்.

அந்த வீடியோவில் ராஜா சிங், “தெலுங்கானாவில் போலீசார் அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசியின் கைப்பாவைகளாக உள்ளனர். அசாதுதீன் கட்சியினர் கற்களை வீசி எறிகின்றனர். ஆனால், அவர்களுக்கு எதிராக காவல் துறையினர் நடவடிக்கை எடுப்பதில்லை. முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படுவதில்லை. முஸ்லிம் வாக்கு வங்கி அரசியலில் ஆளும் தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சி ஈடுபட்டு வருகிறது. முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவின் மகனும், நகராட்சி வளர்ச்சித் துறை அமைச்சருமான கே.டி.ராமா ராவ் ஆகியோர் தான் இன்றைய தெலங்கானாவின் சூழ்நிலைக்குக் காரணம் ” என்று அந்த வீடியோவில் பேசியிருந்தார்.

அதைத் தொடர்ந்து போலீஸார் ராஜா சிங்கை கைது செய்தனர். முன்னதாக, ராஜா சிங் மத உணர்வுகளை புண்படுத்துதல் மற்றும் இரு பிரிவினரிடையே பகைமையை ஊக்குவித்த குற்றச்சாட்டின் கீழ் கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார். ஆனால் காவலில் வைக்க காவல் துறை விடுத்த கோரிக்கையை நிராகரித்து அவருக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கியது குறிப்பிடத்தக்கது.



source https://news7tamil.live/controversial-comment-in-video-telangana-bjp-mla-arrested-again.html