திங்கள், 29 ஆகஸ்ட், 2022

இந்திய மீனவர்கள் 6 பேர் இலங்கை கடற்படையால் கைது

 Six Indian fishermen arrested by Sri Lanka Navy: இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடித்ததாக கூறி ஆறு இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்து அவர்களது இழுவை படகுகளையும் கைப்பற்றியுள்ளனர். இந்த கைது நடவடிக்கை ஒரு மாதத்தில் இரண்டாவது சம்பவம் என அதிகாரப்பூர்வ அறிக்கை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

மன்னார் தீவின் வடமேற்கு கரையோரத்தில் அமைந்துள்ள குடியேற்றமான தலைமன்னார் கடற்பகுதியில் சனிக்கிழமை மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைமன்னாரில் கடற்படை காவலில் வைக்கப்பட்டுள்ள மீனவர்கள் மன்னாரில் உள்ள மீன்வளத்துறை பரிசோதகரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்தலில் ஈடுபட்டதாக 10 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டதையடுத்து, சமீபத்திய கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மீனவர் பிரச்சினை இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளில் சர்ச்சைக்குரிய ஒன்றாகும், இலங்கை கடற்படையினர் பாக் ஜலசந்தியில் இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது மற்றும் இலங்கையின் கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததாகக் கூறப்படும் பல சம்பவங்களில் அவர்களின் படகுகளைக் கைப்பற்றியது ஆகியவை இருநாட்டு உறவுகளில் சிக்கல்களை ஏற்படுத்தி வருகிறது. இலங்கையில் இருந்து தமிழகத்தை பிரிக்கும் குறுகலான நீர்நிலையான பாக் ஜலசந்தி, இரு நாட்டு மீனவர்களின் வளமான மீன்பிடித் தளமாகும்.

சர்வதேச கடல் எல்லைக் கோட்டைத் தாண்டி இலங்கை கடற்பரப்பில் மீன்பிடித்ததாகக் கூறி இந்திய மீனவர்கள் இலங்கை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட சம்பவங்கள் அவ்வப்போது நிகழ்ந்து வருகின்றன.


source https://tamil.indianexpress.com/tamilnadu/indian-fishermen-arrested-sri-lanka-navy-501515/