மாநில அரசு கொண்டுவந்துள்ள செஸ் வரியை முறையாக நீக்க வேண்டும் என அழுத்தம் கொடுக்கப்படும் என விக்கரமராஜா தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் செஸ் வரி குறித்தும் வியாபாரிகளிடம் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மண்டல தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா கலந்து கொண்டு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாநில அரசு கொண்டுவந்துள்ள செஸ் வரியை முறையாக நீக்கப்பட வேண்டும் என வணிகர் சங்க பேரமைப்பின் சார்பில் அழுத்தம் தரப்படும் என்றார். மதுரையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெறும் போது, உண்ணாவிரத போராட்டத்தை நடத்துவது என்பது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு யாரையும் சார்ந்திராமல் வன்னியர்களை மட்டுமே சார்ந்து இருக்கும். தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை வணிகர்கள் விற்பனை செய்யக்கூடாது என கேட்டுக்கொண்ட அவர், அதேபோல் தடை செய்யப்பட்ட கஞ்சா தமிழகத்தில் மிகையாக ஊடுருவிக் கொண்டிருக்கிறது அதை முதலமைச்சர் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
அரிசி, பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் ஜிஎஸ்டி உயர்வை தமிழ்நாடு வணிகர் சங்களின் பேரமைப்பு எதிர்க்கிறது. இது குறித்து முறையாக நாங்கள் ஒன்றிய நிதி
அமைச்சரிடம் எங்களது கோரிக்கையை வைத்துள்ளோம். தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்யக் கூடாது என்பதில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு உறுதியாக இருக்கிறது.
தமிழ்நாட்டில் இந்து அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில் கடைகளில் வாடகைகளை உடனடியாக முறைப்படுத்தி அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை வைக்கிறது என தெரிவித்த அவர், தமிழ்நாட்டில் கலப்பட பொருளை தயாரிக்க கூடாது விற்பனை செய்யக்கூடாது என்பதில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு உறுதியாக உள்ளது என தெரிவித்தார்.
– இரா.நம்பிராஜன்
source https://news7tamil.live/the-cess-tax-introduced-by-the-state-government-should-be-abolished-properly-vickramaraja.html