நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, மத்திய பாஜக தலைமையிலான அரசு ஹர் கர் திரங்கா என்ற பரப்புரையை முன்னெடுத்துள்ளது. இந்த நிலையில் ஆர்எஸ்எஸ் மற்றும் தேசிய கொடி உறவு குறித்த விவாதங்கள் மீண்டும் எழுந்துள்ளன.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆக.3ஆம் தேதி ஆர்எஸ்எஸ் தலைமை அலுவலகத்தில் கடந்த 52 ஆண்டுகளாக ஏன் தேசிய கொடியை ஏற்றவில்லை எனக் கேள்வியெழுப்பினார். மறுதினமே ஏஐஎம்ஐஎம் கட்சியின் நிறுவனத் தலைவர் அசாதுதீன் ஓவைசி, “ஆர்எஸ்எஸ் சுதந்திர இந்தியாவையும், தேசிய கொடியையும் நிராகரித்துவிட்டது” என ட்வீட் செய்தார்.
ஹர் கர் திரங்கா பரப்புரை சண்டை எப்படி வந்தது?
மத்தியில் ஆளும் பாஜக அரசாங்கம் ஹர் கர் திரங்கா பரப்புரையின் ஒரு பகுதியாக, அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடி ஏற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொண்டது. மேலும் சமூக வலைதளங்களிலும் மூவர்ணக் கொடியை முகப்பு புகைப்படமாக மாற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்தது.
தொடர்ந்து தலைவர்கள் முகப்பு புகைப்படத்தை மூவர்ணக் கொடியாக மாற்றிக்கொண்டனர். இதை உள்நோக்கம் கொண்டது என எதிர்க்கட்சிகள் கேள்வியெழுப்பின. இது தொடர்பாக இந்தியில் ட்வீட் செய்த ஜெய்ராம் ரமேஷ், “நாங்கள் எங்கள் தலைவர் நேரு பிடித்த தேசியக் கொடியை முகப்பாக வைத்துள்ளோம். பிரதமரின் செய்தி அவர்களின் குடும்பத்தினருக்கு கூட சென்று சேரவில்லை என நினைக்கிறேன். ஆர்எஸ்எஸ் தலைவர்கள் பிரதமரின் பேச்சுக்கு கீழ்படிவார்களா? என்றார்.
இது குறித்து பேசிய ஆர்எஸ்எஸ் செய்தித் தொடர்பாளர் சுனில் அம்பேகர், “நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுக்க கொண்டாட்டங்களை ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் நடத்திவருகின்றனர். சுதந்திர தின விழாவில் அரசியல் கூடாது” என்றார்.
ஆர்எஸ்எஸ் தலைமையகத்தில் தேசியக் கொடி 50 ஆண்டுகள் இடைவெளி ஏன்?
நாக்பூர் ஆர்எஸ்எஸ் தலைமையகத்தில் இந்திய தேசியக் கொடி ஆங்கிலேயரிடமிருந்து நாடு விடுதலை பெற்ற ஆகஸ்ட் 15, 1947 மற்றும் முதல் குடியரசுத் தினமான 26 ஜனவரி 1950 ஆம் ஆண்டில் ஏற்றப்பட்டது.
தொடர்ந்து 50 ஆண்டுகளாக ஆர்எஸ்எஸ் தலைமையகத்தில் தேசியக் கொடி ஏற்றப்படவில்லை.
அடுத்ததாக 2002ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி தேசியக் கொடி ஏற்றப்பட்டது. இது குறித்து சில ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் கூறுகையில், “2002ஆம் ஆண்டு வரை தனியார் நிறுவனங்களில் தேசியக் கொடி ஏற்ற அனுமதியில்லை. ஆகையால் தேசியக் கொடி ஏற்றவில்லை” எனக் கூறினர்.
முன்னதாக 26 ஜனவரி 2001ஆம் ஆண்டு ஆர்எஸ்எஸ் பவனில் மூவர் வலுக்கட்டாயமாக தேசியக் கொடி ஏற்றினர். இது குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அப்போது மூவர் தேசியக் கொடியை ஏற்றினர் என்றும் அவரை சிலர் தடுத்தனர் என்றும் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. இந்த வழக்கு போதிய ஆதாரங்கள் இல்லாததால் 2013ஆம் ஆண்டு கைவிடப்பட்டது.
ஆர்எஸ்எஸ் தலைவர்களும் தேசியக் கொடியும்!
டெல்லி விஞ்ஞான் பவனில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் பவனில் ஏன் தேசியக் கொடி ஏற்றப்படுவதில்லை எனக் கேள்வியெழுப்பப்பட்டது.
அதற்குப் பதிலளித்த சங்க நிர்வாகிகள் ஆர்எஸ்எஸ் தேசியக் கொடியோடு நெருங்கிய தொடர்பு கொண்டது என்றனர்.
முன்னதாக 2015ஆம் ஆண்டு சென்னையில் நடந்த ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில், தேசியக் கொடியில் காவி வர்ணம் மட்டுமே இருந்திருக்க வேண்டும்; மற்ற நிறங்கள் வகுப்புவாதத்தை பிரதிப்பலிக்கின்றன” என்று கூறப்பட்டது.
மறைந்த ஆர்எஸ்எஸ் தலைவர் எம்எஸ் கோவால்கர் தன்னுடைய பஞ்ச் ஆஃப் தார்ட்ஸ் (Bunch of Thoughts) என்ற புத்தகத்தில், “நாட்டில் ஏற்கனவே தேசியக் கொடி இருக்கும்போது தலைவர்கள் ஏன் வலுக்கட்டாயமாக ஒரு புதிய கொடியை உருவாக்கியுள்ளனர். இந்தக் கொடி எப்படி உருவானது” எனவும் கேட்டிருந்தார்.
தொடர்ந்து தேசியக் கொடி குறித்து பல்வேறு விளக்கங்கள் அளிக்கப்பட்டன. பிரெஞ்சு புரட்சியின்போது சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் சுதந்திரம் ஆகியவற்றை விவரிக்கும் வகையில் மூவர்ணங்கள் இணைக்கப்பட்டன. அமெரிக்காவும் சில மாற்றங்களுடன் இதனைப் பின்பற்றியது.
இது சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு ஒது உத்வேகத்தை கொடுத்தது. இதையறிந்த காங்கிரஸ் தலைவர்கள் மூவர்ணக் கொடியை கையில் எடுத்தனர். மேலும் மூவர்ணம் என்பது இந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவம் ஆகியவற்றை பிரதிபலிப்பாக இருக்கிறது எனக் கூறப்பட்டது.
இதனை வகுப்புவாத அணுகுமுறை என்று ஆர்எஸ்எஸ் தலைவர்கள் கூறினார்கள். பின்னர் காவி என்பது தியாகத்தையும், வெள்ளை என்பது தூய்மையையும், பச்சை என்பது வளர்ச்சியையும் குறிப்பதாக கூறப்பட்டது.
முன்னதாக 1947ஆம் ஆண்டு ஆர்எஸ்எஸ் பத்திரிகையில் மூன்று வர்ணம் என்பது நாட்டிற்கு தீங்கு விளைவிக்கும், மோசமான விளைவுகளை, உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எழுதப்பட்டது. மேலும் இந்தக் கொடியை இந்துக்கள் விரும்பமாட்டார்கள்” எனவும் கூறப்பட்டது நினைவு கூரத்தக்கது.
source https://tamil.indianexpress.com/explained/the-rss-s-relationship-with-the-national-flag-490715/