வெள்ளி, 12 ஆகஸ்ட், 2022

திமுக சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களை, நேற்று இரவு கிழித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்ட ரை - போலீசார் கைது செய்தனர்

12.08.2022 கோவை அவிநாசி சாலையில் திமுக சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களை, நேற்று இரவு கிழித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்ட பாஜகவினரை போலீசார் கைது செய்தனர்.

கடந்த ஜூலை மாதம் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவைக்கு வருவதாக இருந்தார் . அவரை வரவேற்கும் விதமாக திமுக சார்பில் அவிநாசி சாலையில் அரசின் சாதனை விளக்க போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.முதல்வருக்கு கொரோனோ நோய்த் தொற்று பாதிப்பு ஏற்பட்டதன் காரணமாக கோவை வருவது ஒத்திவைக்கப்பட்டது . கடந்த சில தினங்களுக்கு முன் கோவை மாநகராட்சி சார்பில், மாநகராட்சி பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்ட தடை விதிக்கப்பட்டிருந்தது.

 இந்நிலையில் திமுகவினர் ஒட்டிய போஸ்டர்கள் அகற்றபடாமல் இருந்ததால், அதிமுக மற்றும் பாஜகவினர் கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்து அவற்றை அகற்றகோரி மனு அளித்தனர். மாவட்ட ஆட்சியர் 10 நாட்களுக்குள் அவிநாசி சாலையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களை அகற்றுமாறு திமுகவினருக்கு உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் அவிநாசி சாலையில் மட்டும் இருந்த போஸ்டர்கள் அகற்றப்படாததால் நேற்று இரவு பாஜகவினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொடிசியா அருகே திரண்டு நள்ளிரவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதே சமயம் திமுகவினரும் அப்பகுதியில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அசம்பாவிதங்கள் நடப்பதை தடுப்பதற்காக முன்னதாகவே அவிநாசி சாலையில் நூற்றுக்கு மேற்பட்ட போலீசார்கள் குவிக்கப்பட்டனர். இரு தரப்பினரும் மாறி மாறி கோஷங்களை எழுப்பிய நிலையில் போலீசார் இரு தரப்பினரிடமும் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது பாஜகவின் ஒரு பகுதியினர் மேம்பாலத் தூண்களில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களை கிழித்தனர். இதனால் போலீசாருக்கும் பாஜகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து போலீசாரின் எதிர்ப்பை மீறி நள்ளிரவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு போஸ்டர்களை கிழித்த பாஜகவினர் 50-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து கிழிக்கப்பட்ட இடத்தில் திமுகவினர் மீண்டும் போஸ்டர் ஒட்டினர்.

source https://news7tamil.live/bjp-members-arrest.html