ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2022

தீவிரமடையும் தென்மேற்கு பருவமழை; இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

 7 8 2022

தென்மேற்கு பருவமழை தீவிரமடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வங்கக் கடலில் உருவாக உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக, பருவமழை மேலும் தீவிரமடையும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்திருந்தது. குறிப்பாக ஒடிசாவில் சில பகுதியில் கன முதல் மிகக் கனமழை வரை பெய்யும் என்றும் ஆகஸ்ட் 6 முதல் 10 வரை ஒடிசாவில் பரவலாக மழை பெய்யும் என்றும், வங்கக்கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல்பகுதியில் சூறாவளிக் காற்றும் மணிக்கு 45 கி.மீ முதல் 50 கி.மீ வேகத்தில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இன்று இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், வடமேற்கு வங்கக் கடல் மற்றும் ஒடிசா கடற்கரை பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தென்மேற்கு பகுதியில் நகர்ந்து அடுத்து 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ் பகுதியாக வலுப்பெறும் எனத் தெரிவித்துள்ளது.


இதனால், தமிழ்நாட்டிற்கு எந்த ஒரு பாதிப்பும் கிடையாது எனவும், இந்த புதிய காற்றழுத்த தாழ்வினால் தமிழ்நாட்டுக்குப் பெரிய அளவில் மழை பொழிவு இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், இதன் காரணமாக மத்திய மற்றும் வட இந்தியப் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை மேலும் தீவிரமடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

source https://news7tamil.live/intensifying-southwest-monsoon-india-meteorological-department-warning.html