வெள்ளி, 12 ஆகஸ்ட், 2022

வெடித்து சிதறிய எரிவாயு குழாய்… நூலிழையில் உயிர் தப்பிய வாகன ஓட்டிகள்; கோவையில் பரபரப்பு!

 

11 08 2022 

Coimbatore: Gas pipeline burst during inspection work
Gas pipeline burst during inspection work in Coimbatore tamil news

கோவை மாவட்டத்தில், குழாய்களில் இயற்கை எரிவாயு வினியோகிக்கும் திட்டத்தை செயல்படுத்தும் உரிமையை ஆயில் நிறுவனம் பெற்றுள்ளது. இதன்படி கோவை நகரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு, மாவட்டத்தின் அனைத்து பகுதிகளுக்கும் குழாய்கள் மூலமாக காஸ் விநியோகிக்கப்பட உள்ளது. இதற்காக, கோவை நகரம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில், தேசிய, மாநில நெடுஞ்சாலைகள், மாநகராட்சி மற்றும் கிராம ஊராட்சி சாலைகளில், அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் அனுமதியுடன் குழாய்கள் பதிக்கப்பட்டன.

இந்நிலையில் கோவை பீளமேடு தண்ணீர் பந்தல் சாலையில் எரிவாயு குழாய் ஆய்வு பணி நடைபெற்று வந்தது. அப்போது எந்த ஒரு பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் பொக்லைன் எந்திரம் மூலம் குழிகள் தோண்டப்பட்டது என தகவல்கள் வெளியாகியது. மேலும் இதில் குழாய் ஒடைப்பு ஏற்பட்டதன் காரணமாக எரிவாயு கசிந்து பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதனால் அப்பகுதி முழுவதும் புழுதி மண்டலமாக காட்சியளித்தது. தற்போது இந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

இதில் எரிவாயு குழாய் கசிவு ஏற்பட்டு வெடிக்கும் பொழுது அங்கிருந்த மக்கள் பதறி அடித்துக் கொண்டு ஓடும் காட்சியும், இரு சக்கர வாகனத்தில் சென்றவர்கள் நூலிழையில் உயிர் தப்பியதும் பதிவாகியுள்ளது. எவ்வித பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் இம்மாதிரியான ஆய்வுகளை மேற்கொண்டதால் இந்த அசம்பாவிதங்கள் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

பி.ரஹ்மான் கோவை மாவட்டம்

source https://tamil.indianexpress.com/tamilnadu/coimbatore-gas-pipeline-burst-during-inspection-work-492977/