க.சண்முகவடிவேல்
திருச்சி அரியமங்கலம் காவல் நிலையத்திற்குட்பட்ட திடீர் நகர் பகுதியில் வசித்து வரும் அதிமுக நிர்வாகி கயல்விழி சேகர் மற்றும் அவரது மகன் முத்துக்குமார் மீது வழக்குகளுக்கு பஞ்சமில்லை.
அந்தவகையில், நேற்று (ஆகஸ் 3) மாலை போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், திருச்சி மாநகராட்சி முன்னாள் மாமன்ற உறுப்பினரும், அதிமுக நிர்வாகியுமான கயல்விழி சேகர் வீட்டில் அவரது மகன் முத்துக்குமார் கொலை செய்யும் நோக்குடன் நாட்டு வெடிகுண்டுகளை பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை நடத்தினர்.

அதிமுக நிர்வாகியாக இருக்கும் முத்துக்குமார் தனது தாயுடன் வசித்து வரும் கொடிகாத்த குமரன் தெருவில் உள்ள அவரது வீட்டில் திருச்சி மாநகர துணை ஆணையர் ஸ்ரீதேவி, பொன்மலை காவல் உதவி ஆணையர் காமராஜ், வெடிகுண்டு தடுப்பு பிரிவு ஆய்வாளர் சத்தியமூர்த்தி, தடயவியல் ஆய்வாளர் ராஜேந்திரன் ஆகியோர் கொண்ட காவலர் படை அதிரடியாக சென்று சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, ஆணி, பால்ரஸ், வெடிமருந்துகள் கொண்ட பை, அதிக சத்தத்துடன் வெடிக்கக்கூடிய வெடிகுண்டு மற்றும் 1 கிலோ எடை கொண்ட கையெறி குண்டுகள் கைப்பற்றப்பட்டு அந்த குண்டுகள் பாடாலூர் கல்குவாரிக்கு எடுத்துச்சென்று செயலிழக்க செய்யப்பட்டன.

வெடிகுண்டுகள் வைத்திருந்தது தொடர்பாக அரியமங்கலம் போலீஸார் முத்துக்குமாரை கைது செய்தனர். மேலும், அவரது கூட்டாளிகளாக செயல்பட்ட கீழ அம்பிகாபுரம் காவிரி நகரைச்சேர்ந்த சேகர் என்பவரின் மகன் சரவணன், குட்ட பாலு, கணேசன் உள்ளிட்டோர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

பட்டப்பகலில் அதிமுக நிர்வாகி வீட்டில் வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்ட சம்பவம் திருச்சி மாநகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கைது செய்யப்பட்ட முத்துக்குமார் மீது ஏற்கனவே பல கொலை வழக்குகள் அரியமங்கலம் காவல் நிலையத்தில் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/admk-functionary-arrested-for-storing-explosives-in-house-after-police-raid-in-trichy/