கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆழியார் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் கனமழையால் பொள்ளாச்சி அருகே உள்ள 120 அடி கொள்ளளவு கொண்ட ஆழியார் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பால் அணையின் நீர்மட்டம் 117.5 அடியை எட்டியுள்ளது.
மேலும் வால்பாறை, அப்பர், ஆழியாறு போன்ற பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் ஆழியார் அணைக்கு தண்ணீர் 3174 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து அப்படியே உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இதனால் ஆழியாற்று கரையோர குடியிருப்பு பொதுமக்களுக்கு பொதுப்பணித்துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த வெள்ள அபாய எச்சரிக்கை ஆளியார் ஆற்றங்கரை, ஆனைமலை, அம்பராம்பாளையம் போன்ற பகுதிகளுக்கும் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆற்றில் யாரும் குளிக்க துணி துவைக்க கூடாது, கால்நடைகளை ஆற்றில் இறங்க விடக் கூடாது எனவும் வருவாய்த் துறையினர், பொதுப்பணித்துறையினர், காவல் துறையினர் அறிவுறுத்தி தற்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை செய்தியாளர் ரகுமான்
source https://tamil.indianexpress.com/tamilnadu/flood-warning-for-anaimalai-ambarampalayam-areas-of-coimbatore-491428/