ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 7) குஜராத்தின் சோட்டா உதேபூர் மாவட்டத்தில் உள்ள பழங்குடியினருக்கு ஆறு அம்ச உத்தரவாதத்தை அறிவித்தார். பட்டியலிடப்பட்ட பஞ்சாயத்து பகுதிகளுக்கு நீட்டிக்கும் சட்டமான பெசா சட்டம் கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
பெசா சட்டம் 1996-இல் பஞ்சாயத்துகள் தொடர்பான அரசியலமைப்பின் பகுதி 11வது விதிகள் அட்டவணைப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு நீட்டிபதற்காக இயற்றப்பட்டது. (பஞ்சாயத்துகளைத் தவிர, அரசியலமைப்பின் 243-243ZT பிரிவுகளை உள்ளடக்கிய பகுதி IX, நகராட்சிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் தொடர்பான விதிகளைக் கொண்டுள்ளது.)
பெசா சட்டத்தின் கீழ், பட்டியலிடப்பட்ட பகுதிகள் பிரிவு 244(1) இல் குறிப்பிடப்பட்டுள்ளது. இது ஐந்தாவது அட்டவணையின் விதிகள் அஸ்ஸாம், மேகாலயா, திரிபுரா மற்றும் மிசோரம் தவிர மற்ற மாநிலங்களில் உள்ள அட்டவணைப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கும் பழங்குடியினருக்கும் பொருந்தும் என்று கூறுகிறது. ஐந்தாவது அட்டவணை இந்த பகுதிகளுக்கான சிறப்பு ஏற்பாடுகளை வழங்குகிறது.
பெசா சட்டம் 1996 எவ்வாறு செயல்படும்?
பெசா சட்டம் பட்டியலிடப்பட்ட பகுதிகளில் வாழும் மக்களுக்கு கிராம சபைகள் மூலம் சுய நிர்வாகத்தை உறுதி செய்வதற்காக இயற்றப்பட்டது. பட்டியலிடப்பட்ட பகுதிகளில் வசிக்கும் பழங்குடியின சமூகங்கள், தங்களின் சுயமான அரசு அமைப்புகளின் மூலம் தங்களைத் தாங்களே ஆளும் உரிமையை இது அங்கீகரிக்கிறது. மேலும், இயற்கை வளங்கள் மீதான அவர்களின் பாரம்பரிய உரிமைகளையும் அங்கீகரிக்கிறது.
இந்தக் குறிக்கோளைப் பின்பற்றி, வளர்ச்சித் திட்டங்களை அங்கீகரிப்பதிலும், அனைத்து சமூகத் துறைகளையும் கட்டுப்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்க கிராம சபைகளுக்கு இந்த சட்டம் அதிகாரம் அளிக்கிறது. கொள்கைகளைச் செயல்படுத்தும் செயல்முறைகள் மற்றும் பணியாளர்கள், சிறு வன வளங்கள் (காட்டில் விளையும் உணவுப் பொருள்கள்), சிறு நீர்நிலைகள் மற்றும் சிறு கனிமங்கள், உள்ளூர் சந்தைகளை நிர்வகித்தல், நிலம் அந்நியப்படுத்தப்படுவதைத் தடுப்பது மற்றும் போதைப்பொருட்களை ஒழுங்குபடுத்துதல் போன்றவற்றைக் கட்டுப்படுத்துதல் அடங்கும்.
மாநில அரசுகள் பெசா சட்டத்தின் ஆணைக்கு முரணாக எந்த சட்டத்தையும் உருவாக்காமல், அந்தந்த பஞ்சாயத்து ராஜ் சட்டங்களை திருத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பத்து மாநிலங்கள் – ஆந்திரப் பிரதேசம், சத்தீஸ்கர், குஜராத், இமாச்சலப் பிரதேசம், ஜார்கண்ட், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா, ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா – இந்த மாநிலங்கள் ஒவ்வொன்றிலும் உள்ள பல மாவட்டங்களை உள்ளடக்கிய (பகுதி அல்லது முழுமையாக) ஐந்தாவது அட்டவணைப் பகுதிகளாக அறிவித்துள்ளன.
பெசா சட்டம் இயற்றப்பட்ட பிறகு, மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் மாதிரி பெசா விதிகளை அறிவித்தது. இதுவரை, குஜராத் உட்பட 6 மாநிலங்கள் இந்த விதிகளை அறிவித்துள்ளன.
குஜராத்தில் என்ன பிரச்சினை?
குஜராத் மாநில பெசா சட்ட விதிகளை ஜனவரி 2017-இல் அறிவித்துள்ள்ளது. இது அந்த மாநிலத்தின் 8 மாவட்டங்களில் உள்ள 50 பழங்குடியினர் தாலுகாக்களில் உள்ள 2,584 கிராம பஞ்சாயத்துகளின் கீழ் உள்ள 4,503 கிராம சபைகளுக்கும் பொருந்தும்.
2020 டிசம்பரில் பழங்குடியினர் மாவட்டமான சோட்டா உதேபூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அப்போதைய முதல்வர் விஜய் ரூபானி, இந்தச் சட்டத்தை ‘பழங்குடியினர் வளர்ச்சியின் பொற்காலம்’ என்று பாராட்டினார். கிராம சபைகளுக்கு அவர்களுடைய பிரச்னைகளில் முடிவெடுக்கும் முழு அதிகாரம் இருக்கும் என்றும் ஒரு தனி பாதுகாப்புப் படை அளிக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
இருப்பினும், அவர்களின் பழக்கவழக்கங்கள், மரபுகள் மற்றும் பழங்குடியினப் பகுதிகளில் உள்ள இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்காக தங்கள் பிரதேசங்கள் தொடர்பான விஷயங்களைக் கையாள்வதில் கிராம சபைகள் மிகவும் திறமையானவை என்று சட்டத்தின் விதிகள் கருதினாலும், சட்டம் அதன் முழு அளவில் செயல்படுத்தப்படவில்லை என்று சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர்.
பழங்குடியினர் உரிமைகள் தொடர்பாக அதிகாரிகள் மற்றும் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள மனுக்களில் பழங்குடி குழுக்களின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பூஷன் ஓசா, இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது என்பது உறுதியளிக்கப்பட்டதற்கு மாறாக உள்ளது என்று கூறினார்.
ஓசா 2020-இல் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறுகையில், “பழங்குடியினர் பகுதிகள் தொடர்பான விஷயங்களில் அரசாங்கம் மாநில அளவிலோ அல்லது மத்திய அளவிலோ எந்தச் சட்டத்தையும் உருவாக்க முடியாது என்று 4(ஏ) மற்றும் 4(டி) வெளிப்படையாகக் கூறியிருந்தாலும்… பழங்குடியினரின் நிலங்கள் கையகப்படுத்தப் படுவதற்கோ அல்லது அவர்களின் வாழ்விடங்களில் திட்டங்கள் தீட்டப்படுவதற்கோ முன்னர், எப்போதும் அவர்களின் ஒப்புதலைப் பெறவில்லை. பெசா சட்டம் பழங்குடி சமூகத்தின் கலாச்சார மற்றும் பாரம்பரிய நடைமுறைகளில் வேரூன்றியுள்ளது. மேலும், நிர்வாக முடிவுகளை எடுப்பதற்கான இறுதி அதிகாரத்தை கிராம சபைக்கு வழங்குகிறது. ஆனால், கள யதார்த்தம் அதுவல்ல.” என்று கூறினார்.
கிராம சபைக் குழுக்களில் பழங்குடியினரின் பிரதிநிதித்துவம் ஆதிக்கம் செலுத்தும் வகையில் மாநிலம் தேர்தலை நடத்த வேண்டும் என்று பெசா சட்டம் கூறினாலும், விகிதாச்சாரப்படி பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை என்றும் ஓசா கூறினார்.
குஜராத்தில் ஐந்தாவது அட்டவணையின் கீழ் அறிவிக்கப்பட்ட பகுதிகளில் பெசா சட்டத்தை உறுதியாக செயல்படுத்துவது என்பது எம்.எல்.ஏக்கள் சோட்டு வாசவா மற்றும் மகேஷ் வாசவா தலைமையிலான பாரதிய பழங்குடியினர் கட்சியின் முக்கிய விவாதமாக உள்ளது. பாரதிய பழங்குடியினர் கட்சித் தலைவர் சோட்டு வாசவா, இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியுடன் தனது கட்சி கூட்டணி அமைப்பதற்கு பெசா சட்டத்தை அமல்படுத்துவது ஒரு முழுமையான நிபந்தனை என்று கூறியுள்ளார்.
source https://tamil.indianexpress.com/explained/the-pesa-act-and-the-background-of-the-aaps-election-promise-in-gujarat-491501/