மணிப்பூர் மாநிலம் ஃபூகாக்சாவ் இகாய் அவாங் லைக்காய் என்ற இடத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் 4 பேர் வேன் ஒன்றுக்கு நேற்று (ஆகஸ்ட் 6) தீ வைத்தனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது. வகுப்புவாத மோதலை தூண்டும் வகையில் சூழல் அமைந்தது. இதையடுத்து
மணிப்பூர் அரசு, மாநிலத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மொபைல் இணைய சேவை துண்டிக்கப்படுவதாக நேற்று உத்தரவு பிறப்பித்தது.
சில சமூக விரோதிகள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்தி பொதுமக்களின் உணர்வுகளைத் தூண்டும் வகையில் வெறுப்புப் பேச்சுகளை பரப்புகின்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த வெள்ளிக்கிழமை மணிப்பூர் அனைத்து பழங்குடியின மாணவர் சங்கம் (ATSUM) தேசிய நெடுஞ்சாலைகளில் காலவரையற்ற போராட்டத்தை தொடக்கியது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்ல முடியாமல் மக்கள் சிரமத்திற்குள்ளாகினர்.
இந்த போராட்டத்தின்போது மாணவர்கள், காவல்துறையினர் இடையே ஏற்பட்ட மோதலில் 30 மாணவர்கள், 2 போலீசார் காயமடைந்தனர். இதனால் மாநிலம் முழுவதும் பதற்றமான சூழல் ஏற்பட்டது. மணிப்பூர் (மலைப் பகுதிகள்) தன்னாட்சி மாவட்ட கவுன்சில் மசோதா 2021 சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட வேண்டும் என மாணவர் அமைப்பு நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தது. ஆனால் ஆளும் பாஜக அரசு மசோதாவை நிறைவேற்றாமல் இருப்பதையடுத்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
source https://tamil.indianexpress.com/india/data-services-suspended-for-five-days-manipur-govt-says-tense-communal-situation490702/