12 08 2022 சீனா உடனான இந்தியாவின் உறவு சீராக இல்லை என்று மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசிய அவர், இந்திய வெளியுறவுக் கொள்கைக்கான அணுகுமுறையில் மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டார். இத்தகைய மாற்றத்தை ஏற்படுத்திய பெருமை பிரதமர் நரேந்திர மோடியையே சாரும் என்றும் அவர் கூறினார்.
அண்டை நாடுகளைப் பொறுத்தவரை பங்களாதேஷ், பூடான், நேபாள் ஆகிய நாடுகளுடன் ஆழமான தொடர்பை இந்தியா கொண்டிருப்பதாகக் குறிப்பிட்ட ஜெய்சங்கர், இந்த நாடுகளுடன் பல்வேறு திட்டங்களை நாம் பகிர்ந்து கொண்டிருக்கிறோம் என்றார்.
சீன எல்லையில் நிலவும் சூழல் குறித்துப் பேசிய அவர், எல்லையில் சீனா தொந்தரவு அளிக்குமானால் அது இரு நாட்டு உறவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை நாம் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகக் குறிப்பிட்டார்.
சீனா உடனான இந்தியாவின் உறவு சீராக இல்லை என ஒப்புக்கொண்ட வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், எல்லை பிரச்னைதான் இதற்குக் காரணம் என தெரிவித்தார். எல்லைப் பகுதியில் பிரச்னை இருக்கும்போது இரு நாடுகளுக்கு இடையேயான உறவு சீராக இருக்காது என்றும் அவர் கூறினார்.
அதேநேரத்தில் நிலைமை மோசமடைந்துவிடவில்லை என்றும், நெருக்கமான எல்லை பகுதிகளில் இரு நாட்டு படைகளையும் திரும்பப் பெறுவதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கும் இறையாண்மைக்கும் எதிராக ஒரு நாடு செயல்பட்டு வருகிறது என பாகிஸ்தானின் பெயரை நேரடியாகக் குறிப்பிடாமல் விமர்சித்த எஸ். ஜெய்சங்கர், அந்த நாடுதான் நமது நிலப்பரப்பை( பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்) ஆக்கிரமித்துக்கொண்டு நமக்கு எதிராக செயல்பட்டு வருகிறது என்றார்.
எனினும், களத்தில் நமது ராணுவம் முழுமையான பிடிப்புடன் செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
– பால. மோகன்தாஸ்
source https://news7tamil.live/india-china-relationship-is-not-normal-s-jaishankar.html