பீகாரில் கடந்த 2020ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜக கூட்டணி அமைத்து வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டு வந்தது. ஐக்கிய ஜனதா தளத்தை பலவீனப்படுத்தும் நடவடிக்கையில் பாஜக ஈடுபட்டு வந்ததாக பேசப்பட்டது.
இந்நிலையில், கடந்த 2 நாட்கள் முன் பிரதமர் மோடி தலைமையில் நடந்த நிதி ஆயோக் நிர்வாக கவுன்சில் கூட்டத்தில் நிதிஷ் குமார் கலந்து கொள்ளவில்லை. இது அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறியது. பாஜகவுடனான கூட்டணியில் குழப்பம் உள்ளதை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்தது.
பீகாருக்கான சிறப்புப் பிரிவு அந்தஸ்து தொடர்ந்து மறுக்கப்பட்டு வருவது போன்ற விவகாரங்கள் ஜேடியூ-பாஜகவிடையே விரிசலை ஏற்படுத்தி வந்தது.
விதானசபா நூற்றாண்டு விழாவிற்கு சபாநாயகர், பாஜகவை சேர்ந்தவர் அனுப்பிய அழைப்பிதழில், நிதிஷின் பெயர் இடம்பெறாதது மோதல் போக்கை வலுப்படுத்தியது.
இந்தநிலையில், முதல்வர் நிதிஷ் குமார் பாட்னாவில் இன்று (ஆகஸ்ட் 9) தங்கள் கட்சி எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்துகிறார். அதேபோல் எதிர்க்கட்சியான ஆர்ஜேடி, காங்கிரஸ், இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா உள்ளிட்ட கட்சிகளும் தங்களது எல்ஏல்களுடன் தனித்தனியே ஆலோசனை நடத்த உள்ளனர். ஆளும் கூட்டணி அரசில் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில் கட்சிகளின் இந்த ஆலோசனை கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தாக பார்க்கப்படுகிறது. ஜேடியூ-பாஜக கூட்டணி நீடிக்குமா?, நிதிஷ் அடுத்தகட்ட முடிவு எடுப்பாரா? எனப் பல்வேறு கேள்விகள் எழுப்பபடுகிறது.
காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தியுடன் நிதிஷ் குமார் தொலைபேசி வாயிலாக பேசியதாகவும் கூறப்படுகிறது. ஐக்கிய ஜனதா தளம், ஆர்ஜேடி, காங்கிரஸ் கூட்டணி அமைக்க திட்டம் உள்ளதாகவும் தகவல் வெளியானது. முன்னாள் மத்திய அமைச்சர் ஆர்.சி.பி. சிங் அண்மையில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இருந்து விலகினார்.
ஆர்ஜேடி மாநில தலைவர் ஜக்தானந்த் சிங் கூறுகையில், நிதிஷ் குமாரிடம் எங்கள் தரப்பில் இருந்து எந்த திட்டமும் கூறப்பட வில்லை. இது எல்லாமே வியூகம் என்றார். முன்னதாக ஆர்ஜேடி வட்டாரங்கள் கூறுகையில், பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும், தலைமை விஷயத்தில் மட்டும் சிக்கல் உள்ளதாகவும் கூறப்பட்டது.
சூழல் இவ்வாறு இருக்க பாஜக மேலிடம், இந்த விவகாரத்தில் கருத்து தெரிவிக்க வேண்டாம் எனக் கூறியுள்ளது. பாஜக வட்டாரங்கள் கூறுகையில், பீகார் நிலவரம் குறித்து தலைமைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதிஷ் குமாரை தொடர்பு கொள்ள எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எம்எல்ஏக்கள் விவரம்
பீகார் சட்டப்பேரவையில் 243 இடங்கள் உள்ளன. 1 இடம் காலியாக உள்ளது. பாஜகவிடம் 77 எம்எல்ஏக்கள் உள்ளனர். நிதிஷ் குமார் ஜேடியூ 45 எம்எல்ஏக்கள் உள்ளனர். தேஜஸ்வி பிரசாத் யாதவின் ஆர்ஜேடி 79, காங்கிரஸ் 19, சிபிஎம் 12, சிபிஐ 4, ஏஐஎம்ஐஎம் 1, சுயேட்சை 1 எம்எல்ஏ உள்ளனர்.
source https://tamil.indianexpress.com/politics/all-eyes-on-bihar-as-nitish-kumar-signals-switching-sides-again-parties-meet-today-491563/