2021-22ஆம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடியின் அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ.26.13 லட்சம் அதிகரித்துள்ளது- மேலும் குஜராத்தில் உள்ள ஒரு குடியிருப்பு நிலத்தில் தனது பங்கை நன்கொடையாக வழங்கிய பிறகு அவருக்கு எந்த அசையாச் சொத்தும் இல்லை. பிரதம மந்திரி அலுவலகம் (PMO) இணையதளத்தில் அவரது சமீபத்திய சொத்துப் பிரகடனத்தில் இந்த விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.
மார்ச் 31, 2022 வரை வழங்கப்பட்ட விவரங்களுடன், மோடியின் அசையும் சொத்துக்கள் மார்ச் 2021 இறுதியில் ரூ.1,97,68,885ல் இருந்து ரூ.2,23,82,504 ஆக அதிகரித்துள்ளதாக அறிவிப்பு காட்டுகிறது. இதில் நிரந்தர வைப்புத்தொகை (FD), வங்கி இருப்பு, தேசிய சேமிப்புச் சான்றிதழ்கள், ஆயுள் காப்பீட்டுக் கொள்கைகள், வங்கி இருப்பு, நகைகள் மற்றும் கையிருப்பு பணம் ஆகியவை அடங்கும்.
அசையா சொத்துகளுக்கான பத்தியில் பிரதமர் “NIL” என்று குறிப்பிட்டுள்ளார். “அசையா சொத்து சர்வே எண். 401/A மற்ற மூன்று கூட்டு உரிமையாளர்களுடன், ஒவ்வொருவருக்கும் 25% சம பங்கு உள்ளது, அது நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளதால், அது சொந்தமாக இருக்காது.” என பட்டியலின் கீழ் உள்ள ஒரு குறிப்பு கூறுகிறது.
கடந்த ஆண்டு பிரகடனத்தில், காந்திநகரில் உள்ள சர்வே எண். 401/A, செக்டார்-1 இல் அமைந்துள்ள குடியிருப்பு நிலத்தில் நான்கில் ஒரு பங்கை (3,531.45 சதுர அடி) மோடி பட்டியலிட்டிருந்தார், இது மொத்தம் 14,125.80 சதுர அடியில் மொத்த சந்தை மதிப்பு ரூ 1.10 கோடியாகும்.
கடந்த 2002ஆம் ஆண்டு அக்டோபர் 25ஆம் தேதி குஜராத் முதல்வராக இருந்தபோது, மற்ற மூன்று உரிமையாளர்களுடன் சேர்ந்து மோடி இந்தச் சொத்தை வாங்கியதாக முந்தைய அறிவிப்புகள் காட்டுகின்றன. 20 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கியபோது, சொத்து மதிப்பு ரூ.1,30,488. வளர்ச்சி மற்றும் கட்டுமானத்தில் முதலீடு செய்யப்பட்டதன் மூலம், 2,47,208 ரூபாய் செலவானது.
பிரதமரால் பட்டியலிடப்பட்ட அசையும் சொத்துக்களின் பகுப்பாய்வு, கையில் இருக்கும் பணத்தின் அளவு ஓரளவு குறைந்துள்ளது என்பதைக் காட்டுகிறது – கடந்த ஆண்டு ரூ.36,900-லிருந்து ரூ.35,250-ஆக குறைந்துள்ளது. மார்ச் 31, 2021 நிலவரப்படி அவரது வங்கி இருப்பு ரூ.1,52,480ல் இருந்து ரூ.46,555 ஆக குறைந்துள்ளது.
அவரது வங்கியின் நிரந்தர வைப்புத்தொகை மற்றும் மல்டி ஆப்ஷன் டெபாசிட் இருப்பு, மார்ச் 2021 இறுதியில் ரூ.1,83,66,966 லிருந்து ரூ.2,10,33,226 ஆக உயர்ந்துள்ளதாக சமீபத்திய அறிவிப்பு காட்டுகிறது.
கடந்த ஆண்டு, எல் அண்ட் டி இன்ஃப்ராஸ்ட்ரக்சர் பாண்டில் (வரி சேமிப்பு) ரூ.20,000 முதலீடாக பிரதமர் அறிவித்தார், அவர் முதல்வராக இருந்தபோது ஜனவரி 2012 இல் அதை வாங்கினார். இந்த முதலீடு 2022 அறிவிப்பில் இல்லை.
தேசிய சேமிப்புச் சான்றிதழ்களில் (அஞ்சல்) அவர் செய்த முதலீட்டின் மதிப்பு, ஓராண்டுக்கு முன்பு ரூ.8,93,251-ல் இருந்து ரூ.9,05,105 ஆக அதிகரித்துள்ளது. அதேபோன்று, இந்த காலகட்டத்தில் அவரது ஆயுள் காப்பீட்டு பாலிசிகளின் மதிப்பு ரூ.1,50,957ல் இருந்து ரூ.1,89,305 ஆக அதிகரித்துள்ளது.
பிரதமரின் பிரகடனத்தில் நான்கு தங்க மோதிரங்கள் (சுமார் 45 கிராம் எடை) ரூ.1,73,063 மதிப்புள்ளவை- இது ஒரு வருடத்திற்கு முன்பு ரூ. 1,48,331 ஆக இருந்தது.
மனைவிக்கு சொந்தமான சொத்து விவரங்கள் குறித்த பத்தியில், பிரதமர் “தெரியவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.
ராஜ்நாத் சிங், ஆர் கே சிங், தர்மேந்திர பிரதான், ஹர்தீப் சிங் பூரி, ஜி கிஷன் ரெட்டி, ஜோதிராதித்ய சிந்தியா, பர்ஷோத்தம் ரூபாலா, வி முரளீதரன், ஃபகன் சிங் குலாஸ்தே – மற்றும் ஜூலை 6, 2022 அன்று, பொறுப்பில் இருந்து விலகிய முக்தார் அப்பாஸ் நக்வி ஆகிய 10 மத்திய அமைச்சர்களின் சமீபத்திய அறிவிப்புகளையும் PMO இணையதளம் காட்டுகிறது.
30 கேபினட் அமைச்சர்களில், எட்டு அமைச்சர்களின் சொத்து விவரங்கள் உள்ளன, மேலும் 45 மாநில அமைச்சர்களில், இருவரின் விவரங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இரண்டு மாநில அமைச்சர்களின் (Independent Charge) சொத்து விவரங்கள் கிடைக்கவில்லை.
மத்திய அமைச்சர்களில், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்குச் சொந்தமான அசையும் சொத்துகளின் மதிப்பு, 2022 மார்ச் 31-ஆம் தேதி நிலவரப்படி, ரூ.2.24 கோடியிலிருந்து, ரூ.29.58 லட்சம் அதிகரித்து ரூ.2.54 கோடியாக உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் காட்டப்பட்டுள்ள அசையா சொத்துகளின் அதே மதிப்பு – 2.97 கோடி ரூபாய் என அவர் தெரிவித்துள்ளார்.
ராஜ்நாத் சிங் மனைவி சாவித்ரி சிங்கின் சொத்து மதிப்பு ரூ.8.51 லட்சமாக அதிகரித்துள்ளது – இது கடந்த ஆண்டு ரூ.56 லட்சத்தில் இருந்து ரூ.64.51 லட்சமாக அதிகரித்துள்ளது.
கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் நிகர சொத்து மதிப்பு 2021 மார்ச் இறுதியில் ரூ.1.62 கோடியில் இருந்து ரூ.1.83 கோடியாக அதிகரித்துள்ளது. பிரதான் தனது மனைவி மிருதுளா டி பிரதானின் நிகர சொத்து மதிப்பு ரூ.2.92 கோடி என தெரிவித்துள்ளார்- இது கடந்த ஆண்டை விட ரூ. 11.53 லட்சம் அதிகரித்துள்ளது.
கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா சொத்து மதிப்பு 7.29 கோடி என்று தெரிவித்துள்ளார்- இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 1.42 கோடி ரூபாய் அதிகம். இவரது சவிதாபென் ரூபாலாவின் நிகர சொத்து மதிப்பு ரூ. 5.59 கோடி – இது கடந்த ஆண்டை விட ரூ. 45 லட்சம் அதிகரித்துள்ளது.
சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, மார்ச் 31, 2022 நிலவரப்படி மொத்த சொத்துகள் ரூ.35.63 கோடி மற்றும் லையாபிலிட்டிஸ் (liabilities) ரூ.58 லட்சம் என தெரிவித்துள்ளார். அவரது மனைவி பிரியதர்ஷினி ராஜே சிந்தியா ரூ.14.30 லட்சம் சொத்துகள் மற்றும் ரூ.74,000 லையாபிலிட்டிஸ் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
கலாச்சாரத்துறை அமைச்சர் ஜி கிஷன் ரெட்டி மொத்த சொத்து மதிப்பு ரூ.1.43 கோடி. மேலும் அவர் தனது மனைவி ஜி காவ்யா பெயரில் ரூ.8.21 கோடி அசையும் மற்றும் அசையா சொத்துகள் மற்றும் ரூ.75.16 லட்சம் லையாபிலிட்டிஸ் இருப்பதாக கூறியுள்ளார்.
source https://tamil.indianexpress.com/india/modi-assets-declaration-amith-sha-rajnath-singh-assets-declaration-491583/