இந்தியாவில் கடந்த ஆண்டு உருவாக்கப்பட்ட செல்வ வளத்தில் 73% சொத்துக்கள் வெறும் 1% உச்சபட்ச கோடீஸ்வரர்களிடம் குவிந்துள்ளதாக ஆக்ஸ்போம் நிறுவனத்தின் பொருளாதார ஆய்வில் தெரியவந்துள்ளது. இதன் மூலம், நாட்டில் வருமான ஈட்டுவதில் ஏழைகள், பணக்காரர்கள் இடையே மிகமோசமான இடைவெளி உருவாகிவருவது தெரியவந்துள்ளது.
இந்த ஆய்வின் மூலம், 67 கோடி பேர் இந்தியாவில் வறுமையான சூழலில் வாழ்வது தெரியவந்துள்ளது. இவர்கள் வெறும் 1% வளர்ச்சியை மட்டுமே கடந்த வருடம் கண்டுள்ளனர்.
மேலும், இந்த ஆய்வில் இந்தியாவில் உள்ள பெரும் கார்ப்பரேட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஒரு வருடத்தில் சம்பாதிக்கும் வருமானத்தை ஒரு இந்திய தினக்கூலி சம்பாதிக்க 941 வருடங்கள் ஆகும் என தெரியவந்துள்ளது. கடந்த 2017ம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் உள்ள 1% பெரும்பணக்காரர்களின் சொத்து 20.9 லட்சம் கோடி உயர்ந்துள்ளது. இந்த தொகை ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் கடந்த வருடம் மத்திய அரசு போட்ட பட்ஜெட் தொகை அளவுக்கு நிகரானது என்பது கவனிக்கத்தக்கது. இந்தத்தொகை கடந்த 2016ம் ஆண்டு அதிகரித்த சொத்து அளவைவிட சுமார் 4.89 லட்சம் கோடி அதிகமாகும். இந்தத்தொகை இருந்தால் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் சுகாதாரம் மற்றும் கல்விக்கான பட்ஜெட் தயாரித்துவிடலாம் என ஆக்ஸ்போம் தெரிவித்துள்ளது.
கடந்த ஒரு வருடத்தில் ஈட்டப்பட்ட வருமானம் என்பதைத்தாண்டி இந்தியாவில் உள்ள மொத்த சொத்தில், 73% செல்வவளமான 10% பணக்காரர்களிடம் தான் இருக்கிறது என்றும், 37% இந்திய பெருங்கோடிஸ்வரர்கள் இவற்றை குடும்ப சொத்தாக கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோக்கு சர்வதேச அளவிலும் இருக்கிறது. சர்வதேச அளவில் 2017ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட சொத்து/ ஈட்டப்பட்ட வருமானத்தில் 82% சொத்துக்கள் வெறும் 1% உலகப்பணக்காரர்களிடம் உள்ளது. உலக அளவில் சுமார் 370 கோடி பேர் வறுமையில் உள்ளனர். இவர்களின் சொத்து பூஜ்ஜிய சதவீதம் மட்டுமே கடந்த வருடம் உயர்ந்துள்ளது.
இந்த நிலையை மாற்றி, இந்தியாவில் பொருளாதாரம் ஈட்டப்படுவதில் உள்ள கடும் வேறுபாடுகளைக் களைய ஆக்ஸ்போம் நிறுவனம் பல அறிவுரைகளையும் வழங்கியுள்ளது. அவற்றில், பெருநிறுவனங்களுக்கு வரிவிகிதத்தை அதிகப்படுத்தல், பெருநிறுவன தலைமை அதிகாரிகளின் 60% வரை குறைத்தல் என பல விஷயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆக்ஸ்போம் நிறுவனம் ஒவ்வொரு வருடமும் இந்த பொருளாதார ஆய்வைச் செய்துகொண்டிருக்கிறது. இத்தகைய ஆய்வுகள் செய்யப்பட்டு, உலக பொருளாதார சபையில் விவாதிக்கப்பட்ட பின்னரே வெளியிடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.