ஆண்டாள் குறித்து வைரமுத்து பேசிய விவகாரத்தில் அவர் மீது தொடரப்பட்ட வழக்கை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஆண்டாள் குறித்த வைரமுத்துவின் பேச்சும், பத்திரிக்கையில் அவர் எழுதிய கட்டுரையும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் தம் மீது தொடரப்பட்ட வழக்குகளை ரத்து செய்யக்கோரி வைரமுத்து சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றபோது, பெண்களுக்கு அதிகாரமளிக்க போராடியவர் ஆண்டாள் என்றே வைரமுத்து தனது கட்டுரையில் எழுதியதாகவும், ஆண்டாளின் தமிழ் தொண்டை போற்றும் வகையில் வைரமுத்து தனது கருத்தை வெளியிட்டதாகவும் விளக்கமளிக்கப்பட்டது. சர்ச்சைக்குரியதாக சுட்டிக்காட்டப்படும் கருத்து, வைரமுத்துவின் சொந்தக் கருத்து அல்ல என்றும், அமெரிக்க ஆராய்ச்சியாளர் எழுதிய கட்டுரையையே அவர் மேற்கோள்காட்டியதாகவும் வைரமுத்து சார்பில் வாதாடிய வழக்கறிஞர் வீரகதிரவன் விளக்கம் அளித்தார்.
இதையடுத்து, வைரமுத்துவின் பேச்சு குறித்து கருத்து தெரிவித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ரமேஷ், வைரமுத்து தனது சொந்தக் கருத்தைக் கூறவில்லை என்பதால் அவர் மீது குற்றம்சாட்ட முகாந்திரமில்லை என்று தெரிவித்தார். இந்த விவகாரத்தில் காவல்துறை சார்பில் பதில் அளிக்க அவகாசம் கேட்கப்பட்டதையடுத்து வழக்கு விசாரணை பிற்பகலுக்கு ஒத்திவைக்கப்பட்டது. பிற்பகலில் விசாரணை நடைபெற்ற போது வைரமுத்து மீது தொடரப்பட்டுள்ள வழக்குகளை விசாரிக்க உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது. மேலும் வழக்கு விசாரணை பிப்ரவரி 16ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.