உலக அளவில் இந்தியாவுக்கு அதிகம் வர விரும்பும் சுற்றுலாப் பயணிகள் வரிசையில் எந்தெந்த நாடுகள் இடம்பெற்றுள்ளன...?
இந்திய அளவில் சுற்றுலாவில் முன்னணியில் உள்ள மாநிலங்கள் எவை..? இது குறித்த புள்ளி விபரங்களை பார்க்கலாம்.
இந்தியாவிற்கு சுற்றுலா வர உலக நாட்டு மக்கள் பலரும் ஆர்வம் காட்டினாலும், அமெரிக்கர்களே அதிக ஆர்வம் காட்டுவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
இந்திய சுற்றுலாத் துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, கடந்த 2015-ம் ஆண்டில் 12,13,624 அமெரிக்கர்கள் இந்தியாவுக்கு சுற்றுலா வந்துள்ளனர்.
2வது இடத்தில் வங்கதேசத்தினர் உள்ளனர். 2015-ல் 11,33,879 வங்கதேச பயணிகள் இந்தியாவுக்கு வந்துள்ளனர்.
3வது இடத்தில் இங்கிலாந்து நாட்டவரும், 4வது இடத்தில் இலங்கை மற்றும் 5வது இடத்தை கனடா நாட்டவரும் பெற்றுள்ளனர்.
இதேபோல், இந்தியாவில் அதிக வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
கடந்த 2015ம் ஆண்டு கணக்குப்படி தமிழகத்துக்கு மொத்தம் 46,84,707 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.
இந்த பட்டியலில் மஹாராஷ்டிரா 2ம் இடத்தில் உள்ளது. அந்த மாநிலத்துக்கு 44,08,916 வெளிநாட்டு பயணிகள் சுற்றுலாவுக்காக வந்துள்ளனர்.
வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை அதிகம் கவர்ந்திழுத்த மாநிலங்கள் பட்டியலில் உத்தரபிரதேசம், டெல்லி மற்றும் மேற்குவங்கம் போன்ற மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.
உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகையிலும் தமிழகம்தான் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
2015ம் ஆண்டின் கணக்குப்படி உத்தரப்பிரதேசம் 2ம் இடத்தையும், கர்நாடகா 3வது இடத்தையும் பிடித்துள்ளன.