பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், புதிய கட்டணத்தை கேட்டதால் ஆத்திரமடைந்த பயணி ஒருவர், நடத்துனர் மீது கத்தி வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தருமபுரி மாவட்டம் தொட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்த சகோதரர்களான வெற்றிவேல், வேலன் ஆகியோர் நேற்று மாலை மத்தூரிலிருந்து போச்சம்பள்ளிக்கு செல்ல அரசு விரைவு பேருந்தில் ஏறியுள்ளனர்.
அப்போது இருவரிடமும் புதிய டிக்கெட் கட்டணத்தின் அடிப்படையில் தொகை அளிக்குமாறு நடத்துநர் கேட்டுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த இருவரும், நடத்துநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது ஆத்திரமடைந்த வேலன், பையில் வைத்திருந்த கத்தியை எடுத்து நடத்துநர் மீது வீசியுள்ளார். அப்போது சாதுர்யமாக நடத்துநர் விலகியதால் காயம் இன்றி தப்பித்தார்.
அப்போது பேருந்தில் இருந்து குதித்து வேலன் தப்பித்து விட்டதாக கூறப்படுகிறது. எனினும், அவருடன் வந்த வெற்றிவேலை போச்சம்பள்ளி காவல்நிலையத்தில் பயணிகள் ஒப்படைத்தனர்.
பேருந்து நடத்துநர் இதுகுறித்து புகார் ஏதும் அளிக்காததால் வெற்றிவேலை காவல்துறையினர் விடுவித்தனர். இச்சம்பவம், அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.