தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளை 6 மாதத்தில் மூடுவதற்கு தனி நீதிபதி பிறபித்த உத்தரவை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுத்துள்ளது.
மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு தூத்துக்குடி துறைமுகத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ள ஆற்று மணலை தமிழகத்தில் விற்க அனுமதி வழங்கவும், விற்பனைக்காக கொண்டுச் செல்லப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட மணலை திரும்ப ஒப்படைக்க கோரியும் புதுக்கோட்டையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் சார்பில்
சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி மகாதேவன், எதிர்கால சந்ததியினர் நலனுக்காக தமிழகம் முழுவதும் உள்ள மணல் குவாரிகளை 6 மாதத்தில் மூட வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்ட ஆட்சியர்கள் சார்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல் முறையீடு
செய்யப்பட்டது.
இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள் கல்யாண சுந்தரம், கிருஷ்ணவள்ளி அமர்வு, நீதிபதி மகாதேவன் பிறப்பித்த உத்தரவுக்கு தடைவிதிக்க மறுப்பு தெரிவித்தது. மணல்குவாரிகள் மீதான தடை தொடரும் எனக் கூறி மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.