சனி, 27 ஜனவரி, 2018

பேண்டேஜ்-க்கு ஜி.எஸ்.டி வரியிலிருந்து விலக்கு அளிக்க வலுக்கும் கோரிக்கை! January 27, 2018

Image

அடுத்த வாரம் தாக்கல் செய்யப்பட்டும் மத்திய பட்ஜெட்டில், பேண்டேஜ் என அழைக்கப்படும் மருத்துவத் துணிக்கு ஜிஎஸ்டி வரியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று அதன் உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை அடுத்துள்ள சிறிய கிராமம் சத்திரப்பட்டி. இங்கிருந்து தான், நமது நாட்டிற்கு தேவையான 70 சதவீத மருத்துவத் துணிகள் உற்பத்தியாகின்றன. இங்குள்ள 100-க்கும்  மேற்பட்ட மருத்துவ துணி தயாரிக்கும் உற்பத்தி கூடங்களில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். 

இங்கு உற்பத்தியாகும் மருத்துவத் துணிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. இதுவரை 5 சதவீதமாக இருந்த வரி, ஜிஎஸ்டியின் உபயத்தால் 12 சதவீதமானதால் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர் மருத்துவத் துணி உற்பத்தியாளர்கள்.

கடந்த மாதம் முதல் மருத்துவ துணியின் தரம் 9 மைக்ரானாக இருக்க வேண்டும் என அறிவித்திருப்பது மேலும் பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதாக உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், வருமானவரி உச்சவரம்பை ரூ.2.5 லட்சத்திலிருந்து உயர்த்த வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மருத்துவத் துணி தயாரிப்புகளுக்கு 12 சதவீத வரி விதிக்கப்படுவதால், உற்பத்தி குறைந்துள்ளது. இதனால், வேலைவாய்ப்பை இழந்துள்ளதாக தொழிலாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். தற்போது வாரத்திற்கு 2 அல்லது 3 நாட்கள் மட்டுமே வேலை கிடைப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர். 

மருத்துவத் துணி உற்பத்தியை நம்பியிருக்கும், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்களின் நலனை கருதி, ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்பதே சத்திரப்பட்டி மக்களின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.