வாகன ஓட்டிகள் சோதனையின் போது நிற்காமல் சென்றால் அவர்களை துரத்திப் பிடிக்ககூடாது என எந்த உத்தரவும் பிறப்பிக்கடவில்லை என சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை மீறினாலும், வாகன சோதனையின்போது நிற்காமல் போனாலும்கூட போக்குவரத்து காவல் அதிகாரிகள் துரத்திப்பிடிக்கக்கூடாது என உத்தரவிடப்பட்டதாக நேற்று செய்திகள் வெளியானது. இதனிடையே இந்த தகவலை சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகம் மறுத்துள்ளது.
இது தொடர்பாக இன்று அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், குற்றம் செய்பவர்கள் மற்றும் சட்டத்தை மீறுபவர்கள் மீது சட்டப்பூர்வமான அனைத்து நடவடிக்கையும் எடுப்பது காவல் துறையின் கடமை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்துப் பிரிவுகளையும் சார்ந்த காவல் அதிகாரிகள், பொதுமக்களிடம் பரிவோடும் , கனிவோடும் நடந்த கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல் சட்டத்தை மீறுபவர்களிடம் மனித நேயத்துடன் கூடிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.