சனி, 27 ஜனவரி, 2018

​IQ தேர்வில் ஸ்டீபன் ஹாக்கிங் மற்றும் ஐன்ஸ்டீனை விஞ்சிய இந்திய வம்சாவளி சிறுவன்! January 27, 2018

Image

இங்கிலாந்தை சேர்ந்த இந்திய வம்சாவளி சிறுவன் மெஹூல் கார்க் ( 10 வயது) , ஐக்யூ தேர்வில் ஸ்டீபன் ஹாக்கிங் மற்றும் ஆல்பர்ட் எய்ன்ஸ்டீன் போன்ற அறிவியல் அறிஞர்களை விட அதிக மதிப்பெண் எடுத்து சாதனை படைத்துள்ளார்.

எய்ன்ஸ்டீன் மற்றும் ஹாக்கிங்கை விட இரண்டு மதிப்பெண்கள் அதிகமாக பெற்று இவ்வாறான சாதனை புரிந்த ஒரு சதவிகித மக்களுள் ஒருவராக சிறுவன் இடம்பெற்றுள்ளார்.

மேலும், மொழித்திறன் உட்பட பல்வேறு திறமைகளை சோதனை செய்த இத்தேர்வில், சிறுவன் மெஹூல், அதிகபட்சமாக 162 மதிப்பெண் பெற்று, உயர்ந்த ஐக்யூ சமூகமான மென்ஸாவில் உறுப்பினராக தேர்வாகியுள்ளார்.

கிரிக்கெட் மற்றும் பனிச்சறுக்கின் மீது அதீத ஆர்வம் கொண்ட சிறுவனுக்கு கணிதம் விருப்பமான பாடம். கூகுள் போன்ற நிறுவனங்களில் பணி புரியவேண்டும் என்ற கொள்கையை நோக்கி சிறுவன் பயணித்து வருகிறார். அதுமட்டுமல்லாது, ரூபிக் க்யூபை 100 விநாடிகளில் சேர்த்து விடும் திறமை கொண்டவர் மெஹூல் கார்க்.

தற்பொழுது, மெஹூல் கார்க் மற்றும் அவனது சகோதரனும் சமூகசேவை புரியும் நோக்கத்துடன் புதிய செயலியை உருவாக்க நிதி திரட்டி வருவதாகவும், இவ்வாறான காரியங்களில் அவர்கள் ஈடுபடுவது, தனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாகவும், சிறுவன் மெஹூலின் தாயார் திவ்யா கார்க் தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த வருடம் நடந்த தேர்வில், மெஹூவின் அண்ணன் பங்குபெற்று 162 மதிப்பெண்கள் எடுத்து சாதனை புரிந்தது குறிப்பிடத்தக்கது.