திருநெல்வேலி மாவட்டம் தென்காசி அருகேயுள்ள கிராமத்தில் கிறிஸ்தவ ஆலயத்திருவிழாவின் போது பாதுகாப்புக்கு வந்த காவலர்களில் ஒருவர் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தென்காசி அருகேயுள்ள கருத்தப்பிளையூர் என்ற கிராமத்தில் அந்தோணியார் ஆலயத் திருவிழா கடந்த 10 நாட்களாக நடைபெற்றுவருகிறது. நேற்று இரவு சிறப்பு திருப்பலியுடன் நற்கருணை ஆராதனையும் நடைப்பெற்றது. இந்த நற்கருணை ஆராதனை நடைப்பெற்றுக் கொண்டிருக்கும்போது, இரவு 10 மணிக்குமேல் பிராத்தணை செய்யக்கூடாது எனக்கூறி அங்கு பொதுமக்களுக்கு காவலாக இருந்த காவலர் ஒருவர் கூறியுள்ளார். மேலும் ஆராதனை நடைப்பெற்றுக்கொண்டிருந்த மேடைக்கு அருகில் சென்று ஆராதனையை உடனடியாக முடிக்கும்படி வலியுறுத்தியுள்ளார். இதனால் பொதுமக்களில் சிலர் இன்னும் சிறிது நேரம் மட்டும் பொறுமையாக இருக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளனர். ஆனால் அதற்கு காவலர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதனால் பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பாதுகாப்புக்கு வந்திருந்த காவலர்களில் ஒருவரான ஐயப்பன் என்பவர் காவலர்களுக்கான சீருடையை கலைந்துவிட்டு பொதுமக்களுடன் சண்டைக்கு போய் இருக்கிறார். இதனால் அங்கிருந்தவர்கள் போலீசாரை சுற்றிவளைத்து சிறைப்பிடித்தனர். பின்னர் டிஸ்.எஸ்.பி.க்கு தகவல் கொடுப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த டி.எஸ்.பி. ஆலய பாதிரியார் மற்றும் நிர்வாகிகளுடன் சமதானப் பேச்சுவார்த்தை நடத்தி பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்ட காவலர் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார்.
கிறிஸ்தவ ஆலயத்திருவிழாவின் போது காவலுக்கு வந்த காவலர் ஒருவர் பொதுமக்களிடமே சண்டைக்கு போன அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.