ஞாயிறு, 28 ஜனவரி, 2018

என்ன நடக்கிறது இந்திய செல்போன் மார்க்கெட்டில்? January 25, 2018

Image

இந்திய செல்போன் மார்க்கெட் சந்தையில் என்ன நடக்கிறது மிகவும் சுவாரசியமான விவகாரம். ஒவ்வொரு நாளும் வளர்ந்துவரும் தகவல் தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப செல்போன் வியாபாரம், அது தொடர்பான பொருளாதார இயக்கம், செல்போன்களுக்கான அலைபேசி மற்றும் இணைய வசதிகளை வழங்கும் நெட்வொர்க் நிறுவனங்கள் என எல்லா துறையும் வளர்ந்து வருகிறது.

இந்தியாவில் பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்கள் செல்போன் சந்தையில் போட்டிபோட்டு இயங்கி வருகின்றன. தென்கொரியாவைச் சேர்ந்த சாம்சங், சீனாவைச் சேர்ந்த விவோ, ஓப்போ, ஜியோமி, அமெரிக்காவின் ஆப்பிள், இந்தியாவைச் சேர்ந்த மைக்ரோமேக்ஸ், இண்டெக்ஸ், கார்பன் ஆகிய நிறுவனங்கள் சந்தையின் பெரும்பகுதியை ஆக்கிரமித்துள்ளன.

ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவின் செல்போன் மார்க்கெட் குறித்து கேனல்ஸ் மற்றும் கவுண்டர்பாயிண்ட் என்கிற ஆய்வுமையம் ஆய்வு முடிவுகளைக் கொடுத்துவருகிறது.
இந்நிலையில், 2017ம் ஆண்டுக்கான செல்போன் இறக்குமதி, விற்பனை, சந்தையில் எத்தனை சதவீதம் கையில் வைத்திருக்கின்றன என்பதைக் குறித்து ஆய்வு முடிவுகள் கொடுக்கப்பட்டுள்ளன.

இதன்படி, கடந்த ஆண்டு இந்தியாவில் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு சுமார் 300 மில்லியன் ஸ்மார்ட்போன்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. 2017ம் ஆண்டின் நான்காவது காலாண்டில், அக்டோபர் - டிசம்பர் மாத இடைவெளியில் மொத்த சந்தையில் சாம்சங் 23% பங்கு வைத்துள்ளது. அதேநேரம், ஜியோமி நிறுவனம் 25% பங்கு வைத்துள்ளது. இதன்மூலம், செல்போன் மார்க்கெட்டில் பெரும் ஜாம்பாவனாக இருக்கும் சாம்சங் நிறுவனத்தை ஜியோமி வீழ்த்தியுள்ளது.

ஆனால், இது ஒரு காலாண்டில் மட்டுமே நடந்துள்ளது. 2017ம் ஆண்டிலேயே ஜனவரி-மார்ச், மார்ச்-ஜூன், ஜுன் - செப்டம்பர் வரையிலான மற்ற மூன்று காலாண்டுகளிலும் சாம்சங் நிறுவனமே ஆதிக்கம் செலுத்தியுள்ளது.

ரிலையன்ஸ் ஜியோவின் வருகை, ஜியோமிக்கு பெரும் பூஸ்ட்டாக இருந்துள்ளது. ஜியோ வாடிக்கையாளர்கள் புதிதாக பல லட்சத்தில் இணைந்திருக்கிறார்கள். இவர்களுக்குத் தேவையான 4ஜி இணையச்சேவை உள்ள செல்போன்கள் ஜியோமியில் குறைந்தவிலையில் கிடைக்கின்றன. மேலும், இந்தவகை செல்போன்களை சாம்சங்கை காட்டிலும் அதிக அளவில் இறக்குமதி செய்துள்ளது.

அதேநேரம், மொத்த விற்பனையால் கிடைக்கும் லாபம், அதிக அளவில் செல்போன்களை சந்தையிலும், கடையிலும் இருப்பு வைத்திருப்பது ஆகியவற்றில் சாம்சங் நிறுவனமே முன்னணியில் உள்ளது. சீன நிறுவனங்களான விவோ மற்றும் ஓப்போ முறையே தலா 6% பங்குகளை வைத்துள்ளன.

ஒருகாலத்தில் சுமார் 50% சந்தையைக் கட்டுப்படுத்தி வந்த மைக்ரோமேக்ஸ், கார்பன், இண்டெக்ஸ் போன்ற இந்திய நிறுவனங்கள் தற்போது தள்ளாடி வருகின்றன எனவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.