பாலின சமத்துவம் என்பது தேசத்தின் வளர்ச்சி, சமூக முன்னேற்றம், சமுதாய சமநிலை, பொருளாதார வளர்ச்சி என பல்வேறு விஷயங்களையும் உள்ளடக்கியது. அடிப்படையில் ஆணாதிக்க - சாதிமைய சமூகமான இந்தியாவில் இதற்காகத்தான் பல சமூக நலத்திட்டங்களும், பெண்கள் முன்னேற்றத்திற்காக பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்களும் செய்யப்படுகின்றன.
சமூக வலைதளங்கள், தொலைக்காட்சிகள் என பல்வேறு தளங்களிலும் இத்தகைய பிரச்சாரங்கள் செய்யப்பட்டு வருகின்றன. ஆனாலும், இந்தியாவில் ஆண் - பெண் பிறப்பு விகிதமும், பெற்றோர்களின் குழந்தைளின் பாலினத்தேர்வு குறித்த விருப்பமும் மாறவில்லை என்பதையே நேற்றைக்கு இந்திய அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பொருளாதார ஆய்வறிக்கை காட்டுகிறது.
நேற்றைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆய்வறிக்கையில் இந்தியாவில் சுமார் 21 பெண் குழந்தை பிறப்புகள் தவிர்க்கப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது. அதாவது, ஒரு குடும்பத்தில் ஏற்கனவே ஒரு ஆண் குழந்தை இருக்கும்பட்சத்தில் அடுத்தடுத்து குழந்தைகள் பிறக்க பெற்றோர்கள் அனுமதித்துள்ளார்கள். அதேநேரம், பெண் குழந்தைகள் பிறந்திருந்தால் அத்தோடு குழந்தைகள் பெற்றுக்கொள்வதை நிறுத்திக்கொள்ளும் இயல்பு அதிகரித்திருக்கிறது. இப்படி பெண் குழந்தைகள் பிறப்பதைதடுப்பது ‘தவிர்க்கப்பட்ட பெண் சிசு’ என குறிக்கப்பட்டுள்ளது.
இதனால், ஆண் - பெண் பாலின சமத்துவ விகிதாச்சாரத்தில் ஆண்குழந்தைகளின் எண்ணிக்கை கணிசமான அளவு உயர்ந்துள்ளது. குடும்பத்தில் கடைசியாக பிறந்த குழந்தைகளை வைத்து கணக்கிடப்படும் இந்த அளவில், 2005-06 காலகட்டத்தில் பிறந்த குடும்பத்தின் குழந்தைகளில் 100 பேரில் 39.5% பெண்கள், மீதம் 60.5% ஆண்கள் என்று இருந்தது. இந்த அளவு 2015-16 காலகட்டத்தில், 100 பேருக்கு 39 ஆக உயர்ந்துள்ளது.
உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வறிக்கையின்படி, ஆண் - பெண் பாலின விகிதாச்சாரம் 1.05 என்கிற அளவில் இருக்கவேண்டும். அதாவது ஒரு பெண்ணுக்கு 1.05 ஆண்கள் என்ற விகிதத்தில் இருக்க வேண்டும்.
ஆனால், இந்தியாவில் குடும்பத்தில் முதலில் பிறந்த பெண்களுக்கு இந்த விகிதம் 1.82 என்றும், இரண்டாவது பிறந்த பெண்களுக்கு ஆண்கள் விகிதம் 1.55 என்றும், மூன்றாவது பிறந்த பெண்களுக்கு நிகரான ஆண்களின் பாலின விகிதாச்சாரம் 1.55 ஆகவும் உள்ளது தெரியவந்துள்ளது.
இந்தவிகிதம், பஞ்சாப், ஹரியாணாவில் இந்தவிகிதம் மிக அதிகமாக உள்ளது. இந்த மாநிலத்தில் உள்ள பெற்றோர்கள் அதிகம் ஆண்குழந்தைகளையே விரும்புகிறார்கள் என தெரியவந்துள்ளது.
அதேநேரம், ஆய்வறிக்கையில் சில நம்பிக்கையான தகவல்களும் இடம்பெற்றுள்ளன. 74.5% பெண்கள் தங்களுடைய உடல் ஆரோக்கியம் சார்ந்த முடிவுகளை எடுக்கும் நிலையில் கலந்தாலோசிக்கப்படுவதாகவும், 71% பெண்கள் உடல் அல்லது உணர்வு ரீதியிலான வன்முறைகளை எதிர்கொள்ளவில்லை என்றும் தெரியவந்துள்ளது.