ஞாயிறு, 28 ஜனவரி, 2018

​காவிரிக்கு நிரந்தர தீர்வு: விவசாயிகளுக்கு ஆதரவாக போராடிய தலைவர்கள் கைது! January 28, 2018

Image

டெல்டா மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கர்நாடக அரசிடம் இருந்து காவிரி நீரை பெற்றுத் தர கோரியும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், அனைத்து விவசாய சங்கம் சார்பில் தஞ்சை, திருவாரூர், திருச்சி உள்ளிட்ட இடங்களில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. 

மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்தவர்கள் மறியலில் ஈடுபட்டனர். தஞ்சையில், சோழன் விரைவு ரயிலை மறித்து மதிமுக பொதுச் செயலாளர் தலைமையில் ரயில் மறியல் நடைபெற்றது. சுமார் 45 நிமிடங்களுக்கும் மேலாக நீடித்த மறியல் போராட்டத்தை தொடர்ந்து வைகோ உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த வைகோ, காவிரி பிரச்னையில் மத்திய அரசும், கர்நாடக அரசும் தமிழகத்தை தொடர்ந்து வஞ்சிப்பதாக குற்றம்சாட்டினார். மேலும் அரசு பேருந்து கட்டண உயர்வை தமிழக அரசு முழுமையாக திரும்பப் பெற வேண்டுமெனவும் வைகோ வலியுறுத்தினார்.

இதேபோல், திருவாரூரில் ரயில் மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசனும், திருச்சியில் ரயில் மறியல் செய்த மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலர் ஜி.ராமகிருஷ்ணனும் கைது செய்யப்பட்டனர்.