செவ்வாய், 30 ஜனவரி, 2018

526கோடிக்கு வாங்க வேண்டிய போர்விமானத்தை 1570 கோடிக்கு வாங்குவது ஏன்? - நிர்மலாவுக்கு மணிசங்கர் கேள்வி! January 30, 2018

Image

பிரான்ஸ் நாட்டிலிருந்து இந்தியாவுக்கு போர் விமானங்கள் வாங்குவதற்கான ஒப்பந்ததித்தில் பல்லாயிரம் கோடி ஊழல் நடந்திருப்பதாக காங்கிரஸ் குற்றச்சாட்டை எழுப்பியது. இந்தக் குற்றச்சாட்டு குறித்து பதில் அளித்திருந்த பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் ‘காங்கிரஸ் ஆட்சியில் போடப்பட்டிருந்த ஒப்பந்தித்தில் இருந்ததைவிட குறைந்தவிலைக்குத்தான் போர்விமானங்கள் வாங்கப்படுகிறது” என விளக்கம் அளித்திருந்தார்.

மேலும், போர் விமானங்கள் வாங்கப்படும் தொகை குறித்த புள்ளிவிவரங்களை வெளியிடுவதற்கு தனக்கு கூச்சமில்லை எனவும், அமைச்சகத்தின் அதிகாரிகள் அவற்றை வெளியிடுவார்கள் என்றும் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இந்த ரபேல் போர்விமானங்கள் வாங்கப்படும் விவகாரத்தில் நிர்மலா சீத்தாரமனுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான மணிசங்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.

காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் பிரான்ஸின் ‘டிசால்ட் ஏர்கிராப்ட்’ நிறுவனத்துடன் செய்யப்பட்ட ஒப்பந்தத்தின் படி 126 விமானங்களை சுமார் 54,000 கோடிக்கு வாங்க முடிவுசெய்திருந்ததாகவும், ஆனால், தற்போது பாஜக ஆட்சியில் வெறும் 36 விமானங்கள் 58,000 கோடிக்கு வாங்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரஸ் ஆட்சியில் ஒரு விமானம் 526.1 கோடிக்கு வாங்க ஒப்பந்தம் போடப்பட்டிருந்ததாகவும், ஆனால் தற்போது ஒரு விமானம் சுமார் 1570.26 கோடிக்கு வாங்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

526-ஐ விட 1570 என்பது சிறிய தொகையா எனவும் நிர்மலா சீத்தாரமனுக்கு மணிசங்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் 126 விமானங்களில் 18 விமானங்கள் தயார் நிலையில் வாங்கப்படும் என்றும், மீதம் 108 விமானங்கள் இந்தியாவில் வைத்து தயாரிக்கப்படும் என்றும் ஒப்பந்தம் போடப்பட்டிருந்ததாகவும், ஆனால் தற்போது அவை எதுவுமே இல்லாமல் வெறுமனே 36 விமானங்கள் மட்டும் வாங்கப்பட்டிருப்பதாகவும் மணிசங்கர் குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரஸ் ஆட்சியில் போடப்பட்டிருந்த ஒப்பந்தத்தில், விமானத்தை உற்பத்திசெய்யும் தொழில்நுட்பத்தை இந்தியாவுக்கு வழங்குவது என்று முடிவுசெய்யப்பட்டிருந்ததாகவும், அதன் மூலம் இந்தியாவிலேயே சுமார் 250 போர் விமானங்கள் தயாரிக்கத் திட்டமிடப்பட்டிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ள மணிசங்கர், ஆனால் பாஜக ஆட்சியில் இவை எதுவும் பின்பற்றப்படாமல் 36 விமானங்களை 58,000 கோடிக்கு வாங்கியுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், இந்தியாவில் இருக்கும் ஒரேயொரு விமான உற்பத்தி நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏர்கிராப்ட் லிட். நிறுவனமும் சேர்த்துக்கொள்ளப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.