உத்திரப்பிரதேசம் மாநிலம் லக்னோவில் விபத்திற்குள்ளானவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல மறுத்த போலீசாரின் அலட்சியத்தினால் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்ப்டுத்தியுள்ளது.
கடந்த வியாழக்கிழமை இரவு, 17 வயதுள்ள அர்பித் குரானா மற்றும் சன்னி ஆகிய இருவர் பயணம் செய்த இருசக்கர வாகனம் திடீரென்று கட்டுப்பாட்டை இழந்தது. இதனால், சாலைத்தடுப்பில் மோதி விபத்திற்குள்ளானதால் அவர்களின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
அப்போது சம்பவத்தை நேரில் பார்த்த மக்கள் விரைந்து வந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த போலீசாரிடம், காயமுற்றவர்களை அவர்களது வாகனத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொண்டனர். ஆனால், இரத்தக்கறை தங்களது காரில் படிந்துவிடும் என்று கூறி, காரில் ஏற்றி செல்ல மறுத்தனர்.
இதனால், பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், பொதுமக்கள் முயற்சி செய்து காயமடைந்த இருவரையும் அங்கிருந்த டெம்போவில் ஏற்றி அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாத காரணத்தினால், இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். அலட்சியம் காட்டிய போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை அதிகாரி பிரபால் பிரதாப் சிங் தெரிவித்துள்ளார்.