திங்கள், 29 ஜனவரி, 2018

பேருந்து கட்டண உயர்வுக்கு கண்டனம்: திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டம் January 29, 2018

Image

பேருந்து கட்டண உயர்வை முழுவதுமாக திரும்ப பெறக் கோரும் விவகாரத்தில், அடுத்தகட்ட போராட்டம் குறித்து அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி முடிவெடுக்கப்படும் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

பேருந்து கட்டண உயர்வை கண்டித்து சென்னை கொளத்தூர் பகுதியில் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர். இதையடுத்து, தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதற்காக ஸ்டாலின், பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், தமிழக அமைச்சர்கள் சிலர் தனியார் பேருந்துகளை இயக்குவது தொடர்பான குற்றச்சாட்டை அறிக்கையாக தயார் செய்து உரியவர்களிடம் அளிப்போம் எனக் கூறினார். மேலும், போராட்டத்தில் கைதானவர்களை விடுவிக்கவும், வழக்குகளை ரத்து செய்யவும் அவர் வலியுறுத்தினார்.

இதே போல, சைதாப்பேட்டையில் திமுக எம்.எல்.ஏ. மா.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். 

இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டதை தொடர்ந்து அனுமதியின்று போராட்டத்தில் ஈடுபட்டதாக வைகோ, திருமாவளவன் உள்ளிட்ட அனைவரும் கைது செய்யப்பட்டனர். இது குறித்து பேட்டியளித்த வைகோ, பேருந்து கட்டண உயர்வை திரும்ப பெறும் வரை போராட்டம் தொடரும் எனத் தெரிவித்தார்.

பின்னர் பேசிய திருமாவளவன், தற்போதைய கட்டண குறைப்பு கண் துடைப்பு நாடகம் எனவும், கட்டண உயர்வை முழுமையாக திரும்ப பெற வேண்டும் என்றும் வலியுறுத்தினார். ராயப்பேட்டையில் திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதையடுத்து, போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்தனர்.