ஞாயிறு, 21 ஜனவரி, 2018

டெல்லி ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் 20 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்! January 21, 2018

Image

டெல்லி ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் 20 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக தேர்தல் ஆணையம் அளித்த பரிந்துரையை ஏற்று, 20 எம்.எல்.ஏக்களையும் தகுதி நீக்கம் செய்ய, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.

கடந்த 2015ம் ஆண்டு டெல்லில் ஆம் ஆத்மி ஆட்சி அமைந்ததும், அமைச்சர்களுக்கு உதவியாக தங்கள் கட்சியைச் சேர்ந்த 20 எம்.எல்.ஏக்களை, அமைச்சக செயலாளர்களாக நியமித்தார்.

2015ம் மார்ச் 13ந்தேதி முதல் 2016ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8ந்தேதி வரை, அவர்கள் அந்த பதவியை வகித்தனர். இது எம்.எல்.ஏக்களுக்கான விதிமுறைகளுக்கு முரணனானது என்றும், ஆதாயம் தரும் இரட்டை பதவியை அவர்கள் வகித்ததாகவும் கூறி காங்கிரஸ் சார்பில் தேர்தல் ஆணையத்திடம் முறையிடப்பட்டது. 

இந்த வழக்கை விசாரித்து வந்த தேர்தல் ஆணையம்,  20 பேரையும் தகுதி நீக்கம் செய்ய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு, நேற்று முன்தினம் பரிந்துரை செய்தது. 

இந்நிலையில் அந்த பரிந்துரையை ஏற்றுள்ள குடியரசுத் தலைவர் 20 பேரையும் தகுதி நீக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் ஆம் ஆத்மியின் பலம் டெல்லி சட்டப்பேரவையில் 46ஆகக் குறைந்துள்ளது. எனினும் அக்கட்சி ஆட்சிக்கு எந்த ஆபத்தும் இல்லை.