ஞாயிறு, 21 ஜனவரி, 2018

பேருந்து கட்டண உயர்வால் ரயில்களை நாடும் மக்கள்! January 21, 2018

Image

பேருந்துக் கட்டண உயர்வு காரணமாக, ரயில் நிலையங்களில், பயணிகளின் கூட்டம் இன்று அலை மோதியது. 

பேருந்துக் கட்டணம் உயர்த்தப்பட்டதையடுத்து, மாநிலம் முழுவதும் ரயில்களில் பயணிகளின் கூட்டம் நிரம்பி வழிகிறது. ஓய்வுநாளான இன்று, கடலூர் மாவட்டம், விருத்தாசலம் ரயில் நிலையத்தில், காலை முதலே டிக்கெட் கவுண்டர்களில் பயணிகள் நீண்ட வரிசையில் நின்றனர். 

அரியலூர், திருச்சி, மதுரை, கன்னியாகுமரி, விழுப்புரம் ,சென்னை, சேலம் மற்றும் பெங்களூர் செல்லும் பயணிகள், ரயில் நிலையத்தில் அலைமோத தொடங்கினர். 

காரைக்காலில் இருந்து விருத்தாசலம் வழியாக சேலம் மற்றும் பெங்களுர் செல்லும் ரயில்கள், கன்னியாகுமரியில் இருந்து சென்னை செல்லும் அதிவிரைவு ரயில் போன்றவற்றில் அதிகளவில் கூட்ட நெரிசல் காணப்பட்டது. இதனால், ஏராளமான பயணிகள் நிற்கக்கூட இடம் கிடைக்காமல், வாசலில் தொங்கியபடி பயணம் செய்தனர். 

இதேபோல, சேலம் மாவட்டம் ஆத்தூர் ரயில் நிலையத்தில் ரயில் பயணிகளின் கூட்டம் அதிகரித்துள்ளது. ஆத்தூர் வழியாக சேலம் செல்லும் ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.