திருச்சியில் கள்ளத் துப்பாக்கி விற்க முயன்ற சென்னை காவலர் உட்பட மூன்று பேரை ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
திருச்சி தனியார் விடுதியில் கள்ளத்துப்பாக்கிகள் விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையில் சந்தேகத்திற்கு உரிய நபர்களை நோட்டமிட்டு வந்தனர்.
அதில் சென்னை செம்பியம் பகுதியைச் சேர்ந்த காவலர் பரமேஸ்வரன், வில்லிவாக்கத்தைச் சேர்ந்த நாகராஜ், பட்டுக்கோட்டையைச் சேர்ந்த சிவகுமார் ஆகியோர் கள்ளத்துப்பாக்கி விற்க முயன்றதாக தெரியவந்தது.இதனடிப்படையில், அதிகாலையில் அவர்கள் தங்கியிருந்த அறையில் சுற்றி வளைத்து பிடித்தனர்.
மேலும் அவர்கள் வைத்திருந்த 2 துப்பாக்கிகள் மற்றும் 10 தோட்டக்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று சென்னையில் துப்பாக்கி கடத்தியதாக இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கபப்ட்ட நிலையில் இன்று திருச்சியில் காவலர் உட்பட மூன்று பேர் கள்ளத்துப்பாக்கி விற்பனை செய்ய வந்ததாக கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.