சனி, 27 ஜனவரி, 2018

​உயிர் வாழுவதற்கு போராடி வரும் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் அவல நிலை! January 26, 2018

இந்தியா சுதந்திரம் பெற்று மக்கள் அடிமைத்தனத்திலிருந்து விடுபட்டு சுதந்திரமாக வாழ போராடிய தியாகிகள், தற்போது உயிர் வாழுவதற்கு போராடி வருகின்றனர்.  

சொந்தங்கள் கண்டு கொள்ளாத நிலையில், அரசும் எந்த உதவிகளையும் செய்யாமல் அலட்சியம் காட்டி வருவதாக தியாகிகள் மனகுமுறலுடன் தெரிவிக்கின்றனர்.

தமிழகத்திலேயே அதிக சுதந்திர போராட்ட வீரர்கள் கொண்ட பகுதியாக இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை பகுதி திகழ்கிறது. வெள்ளையர்களின் கருவூலம் மற்றும் தடயங்களை அடித்து உடைத்த போராட்ட வீரர்களை, சிறையில் தள்ளி சித்ரவதை செய்த ஆங்கிலேயர்களின் அடக்கு முறைகளை மீறி சுதந்திர தியாகப் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அதன் நினைவாக திருவாடானை பகுதியில் அரசு சார்பில் தியாகிகள் பூங்கா அமைக்கப்பட்டது. 

ராமநாதபுரம் மாவட்டம் புளிக்காரத்தெரு பகுதியை சேர்ந்த 88 வயதான தியாகி சேது, பேசும் போது, 1942ல் ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் இருந்து தாலுகா அலுவலகம் வரை வெள்ளையனே வெளியேறு என முழுக்கமிட்டவாறு போராடிய போது, காவல்துறை தங்களை தாக்கியதாகவும், இதில் தலையில் பலத்த காயமடைந்ததாகவும், அப்பொழுதும் தங்களுடைய போராட்டங்களில் இருந்து பின் வாங்கவில்லை என கூறி தனது பழைய நினைவுகளை நினைவு கூர்ந்தார்.  

அரசு சார்பில் இலவச பேருந்து பயண அட்டை வழங்கியுள்ள போதும், அதனை நடத்துனர்கள் உதாசீனப்படுத்துவதாக கவலையுடன் தெரிவிக்கின்றனர். உறவினர்கள் கண்டு கொள்வதில்லை என்றும், குறைந்த அளவு பென்ஷன் மூலம் வாழ்க்கை நடத்துவதாகவும், அரசு அலுவலகங்களுக்கு சலுகைகள் பெற அதிகாரிகள் அலையவிடுவதாகவும் தெரிவிக்கிறார். 

வாலாந்தரவை பகுதியில் உள்ள தெற்குவாணி வீதி பகுதியை சேர்ந்த தியாகி பச்சையப்பன் மனைவி வள்ளிமயில் கூறும்போது, கடந்த 2011ம் ஆண்டு கணவர் உயிரிழந்த நிலையில், தற்போது வறுமையின் உச்சத்தில் இருப்பதாகவும்,தியாகிகளுக்கு அரசு சார்பில் 2 சென்ட் நிலம் கொடுக்கப்படுகிறது என்று பட்டா மட்டும் வழங்கியதாகவும், இதுவரை நிலத்தை காட்டவில்லைஎன்றும் வேதனை தெரிவிக்கும் அவர், மத்திய  மாநில அரசுகள் உதவி செய்ய முன்வர வேண்டும் என கேட்டு கொண்டார்.