ராய்பூரில் உள்ள கேந்திரிய வித்யாலயாவில் பணிபுரியும் ஆசிரியை தனது மாணவிகளிடம் நிர்பயா பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டதற்கு அவரே காரணம் என்றும், நிர்பயாவிடமே தவறு உள்ளது என்றும் கூறியுள்ளார். மேலும் ஜீன்ஸ், டி-ஷர்ட் ஆடைகள், லிப்ஸ்டிக் போன்றவற்றை பெண்கள் பயன்படுத்தக்கூடாது எனவும் இரவு நேரங்களில் ஆண்களுடன் தனியாக வெளியே செல்லக்கூடாது எனவும் எச்சரித்துள்ளார்.
அழகான முகம் இல்லாத பெண்கள் மட்டுமே கவர்ச்சியான உடை அணிவார்கள். இக்காலத்துப்பெண்கள் வெட்கமின்றி இருக்கிறார்கள், நண்பர் என்ற பெயரில் வேறு ஒரு ஆணுடன் இரவு நேரத்தில், நிர்பயா எதற்காக தனியாக செல்லவேண்டும்? நிர்பயாவின் பெற்றோர் இரவுநேரத்தில் அவரை எப்படி தனியாக அனுப்பினார்கள் என்றெல்லாம் பேசிய உயிரியல் ஆசிரியை மீது மாணவிகள் கடும் எரிச்சலிற்கு ஆளாகினர். மேலும், அவர் பேசியதை பதிவு செய்தும் வைத்துள்ளனர்.
இவ்வாறெல்லாம் பேசிய ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்கும்படி, கடந்த வியாழக்கிழமை, பள்ளி முதல்வருக்கு மாணவிகள் புகார்க் கடிதம் எழுதியுள்ளனர். ஆனால், அது பொய்யான தகவல் என நினைத்த முதல்வர் அக்கடிதத்தினைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. முதல்வர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால், நேற்று அம்மாணவிகளின் பெற்றோர்கள் பள்ளி முதல்வரை சந்தித்து, ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்குமாறு கூறியுள்ளனர். பெண்களை அவதூறாக பேசியதாகவும், சாபமிட்டதாகவும், ஆடியோ பதிவை கேட்டவர்கள், ஆசிரியை மீது குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும், மாணவர்கள் முன்னிலையில் ஆசிரியை இவ்வாறு பேசியது தங்களை மனதளவில் அதிகம் பாதித்தது என்று மாணவிகள் தெரிவித்தனர். இதனடிப்படையில், ஆசிரியை மீது விசாரணைக்குப்பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளித்தலைவர் கே.வி. சங்காதன் தெரிவித்துள்ளார்.