ரத்தம் என்பது நம்உடலில் ஓடக்கூடிய திரவம். நம் நுரையீரலில் இருந்து நாம் உயிர்வாழ்வதற்குத் தேவையான ஆக்சிஜன் வாயுவை நம் உடலில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு எடுத்துச் செல்வதோடு, உடலில் உள்ள கழிவுப்பொருட்களை வெளியேற்றும் முக்கியப் பொருளாகும். ரத்தம் இன்னொரு மனிதனுக்கு வாழ்வளிக்கும் அதிசயதிரவம்ஆகும். நாம் அறிவியலில் எவ்வளவோ முன்னேறியிருந்தாலும் ரத்தம் என்ற அதிசயத் திரவத்தை இன்னமும் செயற்கையாக உருவாக்க முடியவில்லை. அறிவியல் முறையில் செயற்கை ரத்தம் உருவாக்கும் பணிகள் ஆய்வுநிலையிலேயே உள்ளன. பிற்காலங்களில் செயற்கைரத்தம் உருவாக்கப்பட்டால் அது இந்தியா போன்ற வளரும் நாட்டிற்கு அதிக விலை கொடுத்து வாங்கக்கூடிய பொருளாகத்தான் இருக்கும்.
நம்உடலில் உள்ள ரத்தம் காயம்பட்டவர்களுக்கும் ரத்தம் தேவைப்படுபவர்களுக்கும் வழங்கக்கூடிய ஒரு பரிசுப்பொருளைப் போன்றதாகும். நாம் ஒவ்வொருமுறை தானமாகக் கொடுக்கும் ஒரு யூனிட் ரத்தம் நான்குஉயிர்களைக் காக்கும்.
பாதுகாப்பான ரத்தத்தின் தேவை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்தத்தேவையைப் பூர்த்தி செய்வதில் தன்னார்வ ரத்தகொடையாளர்களின் பங்கு மகத்தானது.
ரத்தத்தின் அவசியம்:
விபத்துக்களின்போது ரத்தஇழப்பை ஈடுசெய்ய தேவைப்படுகிறது. பெரியஅறுவைச் சிகிச்சை மேற்கொள்ளும்போது கூடுதலாக ரத்தம் தேவைப்படுகிறது. இதுதவிர ‘தலமீசியா’ நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், தீக்காயம் அடைந்தவர்களுக்கும் ரத்தம் அவசியமாகிறது. மேலும் ரத்தசோகை அதிகம் உள்ளவர்களுக்கும், பிரசவகாலத்தில் ஏற்படும் ரத்தஇழப்பிற்கும், ரத்தப்புற்றுநோய் தாக்கியவர்களுக்கும் உயிர்காக்கும் மருந்தாக ரத்தம் தேவைப்படுகிறது.