வெள்ளி, 26 ஜனவரி, 2018

கோலாகலமாக கொண்டாடப்படும் 69-வது குடியரசு தின விழா! January 26, 2018

Image

நாட்டின் 69-வது குடியரசு தின விழா, இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. 

டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தேசிய கொடியை ஏற்றுகிறார். பிறகு முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொள்ளும் அவர், கண்கவர் கலை நிகழ்ச்சிகளையும் பார்வையிடுகிறார். அப்போது  ராஜபாதையில் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. மேலும் முப்படை பாதுகாப்பு வீரர்களின் அணிவகுப்பு, துணை ராணுவப் படை மற்றும் பிற பாதுகாப்பு பிரிவினர், தேசிய மாணவர் படை, முன்னாள் ராணுவ வீரர்கள் பிரிவு ஆகியோரின் அணிவகுப்பு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. 

மேலும் பல்வேறு மாநிலங்கள் மற்றும் மத்திய அரசுத் துறைகளின் வளர்ச்சி, கலாசாரம், வரலாற்று சிறப்புகள் அடங்கிய காட்சிகள் இடம் பெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் பங்கேற்கின்றனர். மேலும் ஆசியான் அமைப்பைச் சேர்ந்த மியான்மர், இந்தோனேசியா, சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, வியட்நாம், பிலிப்பைன்ஸ், கம்போடியா, லாவோஸ், புருனே ஆகிய 10 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.  குடியரசு தினவிழா கொண்டாட்டங்களை முன்னிட்டு, டெல்லியில் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.