தமிழகத்தில் உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணங்கள் எவ்வளவு குறைக்கப்பட்டுள்ளன என்பது பற்றி தற்போது பார்ப்போம்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பெரும்பான்மையான பொதுமக்களின் வேண்டுகோளை கருத்தில் கொண்டும், போக்குவரத்துக் கழகங்களின் நிதி நிலையைக் கருத்தில் கொண்டும், தமிழக அரசு நன்கு பரிசீலித்து பேருந்து கட்டணங்களை குறைத்து மாறுதல் செய்ய உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வெளியூர்களுக்கு இயக்கப்படும் சாதாரண பேருந்துகளில் கிலோ மீட்டருக்கு 60 பைசாவில் இருந்து 58 பைசாவாகவும், விரைவுப்பேருந்துகளில் 80 பைசாவில் இருந்து 75 பைசாவாகவும் கட்டணம் குறைக்கப்படுகிறது. சொகுசுப் பேருந்துகளில் 90 பைசாவில் இருந்து 85 பைசாவாகவும், அதி நவீன சொகுசு பேருந்துகளில் ஒரு ரூபாய் 10 பைசாவில் இருந்து ஒரு ரூபாயாகவும் கட்டணம் குறைக்கப்படுகிறது. குளிர்சாதனப் பேருந்துகளில் ஒரு ரூபாய் 40 பைசாவில் இருந்து ஒரு ரூபாய் 30 பைசாவாகவும் கட்டணம் குறைக்கப்படுகிறது. இதேபோல் சென்னை மாநகர் மற்றும் மாநிலத்தின் பிற பகுதிகளிலும் இயக்கப்படும் பேருந்துகளில் குறைந்தபட்ச கட்டணம் 5 ரூபாயிலிருந்து 4 ரூபாயாக குறைக்கப்படுகிறது எனவும், மேலும், அனைத்து நிலைகளிலும் ஒரு ரூபாய் கட்டணம் குறைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது