வியாழன், 25 ஜனவரி, 2018

மதிப்பெண்களுக்கு பதிலாக ‘ஸ்மைலி’: மாணவர்களின் மீதான அழுத்தத்தை குறைக்க புதிய முறை! January 24, 2018

Image

முதல் மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகளில் மதிப்பெண்கள் வழங்குவதற்கு பதிலாக இனி ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் பயன்படுத்தப்படும் ஸ்மைலிகளை (Smiley) வழங்க முடிவு செய்துள்ளது மத்திய பிரதேச மாநில கல்வித்துறை.

கற்றலை சுவாரஸ்யமாகவும், அழுத்தமில்லாத வகையிலும் மாற்றும் வகையில், முதல் மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்களுக்கு பதிலாக ஸ்மைலி வழங்கும் புதிய முறையை அடுத்த கல்வியாண்டு முதல் அமல்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது மத்தியப் பிரதேச கல்வித்துறை.

அம்மாநில கல்வித்துறையின் ஆரம்ப மற்றும் தொடக்கக் கல்வி அமைப்பான ராஜ்ய சிக்‌ஷா கேந்திரா, இது தொடர்பான நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக ராஜ்ய சிக்‌ஷா கேந்திரா அமைப்பின் இயக்குநர் லோகேஷ் ஜாதவ் கூறுகையில், “பரீட்சைகளில் மதிப்பெண்களை வாங்க வைப்பதற்காக ஒன்றாம் வகுப்பிலிருந்தே குழந்தைகள் மீது நெருக்கடி மற்றும் அழுத்தத்தை பெற்றோர்கள் திணித்து வருகின்றனர், இதன் காரணமாக அவர்களுக்கு படிப்பின் மீது வெறுப்புணர்வு ஏற்பட வாய்ப்புள்ளது, கல்வியினை சுவாரஸ்யமானதாக்கும் முயற்சிகளில் ஒன்றே இந்த ஸ்மைலி வழங்கும் முறை” என்று அவர் கூறினார்.

இதன் மூலம் எழுத்துத் தேர்வுக்கு பதிலாக வாய்மொழித் தேர்வு வாயிலாகவே ஸ்மைலி மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

மேலும், கல்வி மீதான பயத்தையும் இந்த முறை போக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.