சென்னையில் பல்வேறு கழிவுகளால் பாதிக்கப்பட்டிருக்கும் கூவம் ஆற்றை, மேலும் பாதிக்கும் விதமாக கட்டிடக் கழிவுகள், குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. இது குறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்.
‘தேம்ஸ் ஆப் மெட்ராஸ்’ இவ்வாறு தான் ஆங்கிலேயர்கள் கூவம் ஆற்றை அழைப்பார்கள். தூய்மையான தண்ணீரையும், படகு போக்குவரத்தையும் அடையாளமாக கொண்டிருந்த கூவத்தின் தற்போதைய நிலை அனைவரும் அறிந்த ஒன்றே.
கடந்த 2015ம் ஆண்டு வெள்ளம், கடந்தாண்டு பெருமழை ஆகியவற்றை சென்னை மக்கள் அனுபவித்த பின்னரும் கூட, கூவம் ஆற்றை மறுசீரமைக்கும் வேலைகள் அரசால் பெயரளவுக்கு துவங்கப்பட்டதே ஒழிய, வேகமான நடவடிக்கைகள் இல்லை என்பது சமூக ஆர்வலர்களின் கவலையாக உள்ளது.
தற்போது கூவம் ஆற்றை மேலும் சிதைக்கும் விதமாக கோயம்பேட்டில் இருந்து மதுரவாயல் செல்லும் கூவம் ஆற்றுப் படுகைகளில் கட்டிடக் கழிவுகளும், பிளாஸ்டிக் போன்ற அபாய கழிவுகளும் பெருமளவில் கொட்டப்பட்டு வருகின்றன.
சென்னையில் ஒரு நாளுக்கான கட்டிடக் கழிவுகள் மட்டும் 1,000 டன்னுக்கு மேல். பல்வேறு பகுதிகளில் தேங்கும் கட்டிடக் கழிவுகளை, கூவம் ஆற்றுப் படுகையில் லாரிகள் மூலம் அதிகளவில் கொட்டப்படுவதன் மூலம், ஆற்றின் வழிப்போக்கு சுருங்கி, ஆறு வெறும் கால்வாயாக பல இடங்களில் காட்சியளிக்கிறது.
இதனை கண்காணிக்க வேண்டிய சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை, சென்னை மாநகராட்சி, தமிழக அரசு ஆகியவை மெத்தனமாக இருப்பதுடன், எதிர்கால அபாயங்கள் குறித்த கவலையே இல்லாமல் இருப்பதாக சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
கட்டிடக் கழிவுகள் மட்டுமில்லாமல், கூவம் ஆற்றுப்படுகையின் பல்வேறு இடங்களில் பிளாஸ்டிக் குப்பைகளையும் தேக்கி எரித்து வருகின்றனர். மதுரவாயல் மேம்பாலத்திற்கு கீழ் இருக்கும் கூவம் ஆற்றங்கரையில் பெருமளவில் குப்பைகளை தேக்கி எரித்து வருகிறது .
மதுரவாயல் நகராட்சி. குப்பைகளை தரம் பிரித்து மறுசுழற்சி செய்யாமல், தேக்கிவைத்து எரிப்பதால், தங்களின் குடியிருப்பு பகுதியில் துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். மழை பெய்யும் போது ஆற்றுநீர் வீடுகளுக்குள் புகுவதாலும், உடல்நலம் பாதிக்கும் அபாயம் இருப்பதாக அச்சமடைகின்றனர் பகுதிவாசிகள்.
இதுபோன்ற கூவம் ஆற்றுப்படுகையில் கட்டிடக் கழிவுகள், குப்பைகள் அதிக அளவில் கொட்டப்படுவது குறித்து மாநகராட்சி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டபோது, கழிவுகள் கொட்டுபவர்களை கண்டுபிடித்து தடுக்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.