திங்கள், 22 ஜனவரி, 2018

பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக களமிறங்கிய மாணவர்கள்! January 22, 2018

பேருந்து கட்டண உயர்வை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர். 

இன்று காலை கல்லூரிகளுக்கு செல்ல வந்த மாணவர்கள் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதை கண்டித்து திருப்பூர் புதிய பேருந்து நிலையம் முன்பாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

கல்லூரி மாணவர்களால் தொடங்கபட்ட இந்த போராட்டத்திற்கு பொதுமக்களும் ஆதரவு கொடுத்ததால் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக மறியல் போராட்டம் நடைபெற்றது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

இதனையடுத்து, புதிய பேருந்து நிலையத்தின் உட்புறம் அமர்ந்து தொடர்ந்து 4 மணி நேரமாக போராட்டத்தில் மாணவர்கள் ஈடுபட்டனர். பின்னர், ஆட்சியர் உறுதியளித்ததன் பேரில் மாணவர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

இதேபோல், பேருந்து கட்டண உயர்வை கண்டித்து அரியலூர் அரசு கலைக்கல்லூரியில் படிக்கும் 3,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேருந்து கட்டண உயர்வை கண்டித்து திருவாரூரில் உள்ள திருவிக அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் 500-க்கும் மேற்பட்டோர் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

பேருந்து கட்டண உயர்வை திரும்பபெற வலியுறுத்தி தஞ்சை குந்தவை நாச்சியார் மகளிர் கல்லூரி மாணவிகள் வகுப்புக்களை புறகணித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏராளமான மாணவிகள் பங்கேற்றனர். 

பேருந்து கட்டண உயர்வை கண்டித்து திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் அனைத்திந்திய இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

http://ns7.tv/ta/tamil-news/tamilnadu/22/1/2018/students-protest-support-withdraw-bus-fare-hike